திருச்செங்கோட்டில் சின்ராஜ் எம்.பி.யை பொதுமக்கள் முற்றுகை


திருச்செங்கோட்டில் சின்ராஜ் எம்.பி.யை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 21 May 2020 1:52 AM GMT (Updated: 21 May 2020 1:52 AM GMT)

திருச்செங்கோடு நகராட்சி அலுவலகத்துக்கு நேற்று திடீரென வந்த நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சின்ராஜ் அங்கு ஆய்வு மேற்கொண்டார்.

திருச்செங்கோடு, 

திருச்செங்கோடு  நகராட்சி ஆணையாளர் சையத் முஸ்தபா கமால், பொறியாளர் குணசேகரனிடம் நடைபெறும் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த எம்.பி., “நகராட்சியில் கழிப்பிட பணிகள் நடக்காதது குறித்து கேட்க வந்தேன். பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தி உள்ளேன். பிளச்சிங் பவுடர் ரூ.38 முதல் ரூ.95 வரை பல விலைகளுக்கு வாங்கி உள்ளனர். இதுகுறித்து கலெக்டருக்கு கடிதம் எழுதி உள்ளேன். நகராட்சி சார்பில் கட்டப்படும் கட்டிடங்கள், பாலங்கள் தரம் குறித்த முறையான சான்று வாங்க வேண்டும் என கூறியுள்ளேன்” என்றார்.

 ஆய்வுப்பணி முடித்து வெளியே வந்த எம்.பி. சின்ராஜை பொதுமக்கள் சிலர் வாசலில் முற்றுகையிட்டு கொரோனா காலத்தில் மக்களை சந்திக்க வராதது ஏன்? செய்த நலத்திட்ட உதவிகள் என்ன? என சரமாரி கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த எம்.பி., மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியபடி தனித்திருந்தேன். 

என்னடைய தொலைபேசி எண்ணிலும், வாட்ஸ்-அப்பிலும் தொடர்பு கொண்டு உதவி கோரியவர்களுக்கு உதவினேன் என்றார். அப்போது அங்கு வந்த திருச்செங்கோடு நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் உள்ளிட்ட போலீசார் எம்.பி.யை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Next Story