நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை ஆய்வகம் தயார்


நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை ஆய்வகம் தயார்
x
தினத்தந்தி 21 May 2020 7:33 AM IST (Updated: 21 May 2020 7:33 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை ஆய்வகம் தயார் நிலையில் உள்ளது. இது விரைவில் பயன்பாட்டுக்கு வர இருப்பதாக மருத்துவ கல்லூரி டீன் சாந்தா அருள்மொழி கூறினார்.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 5,700-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதற்காக சந்தேக நபர்களிடம் இருந்து உமிழ்நீர் எடுக்கப்பட்டு சேலம், கோவை மற்றும் சென்னையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் 77 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. தற்போது அவர்கள் அனைவரும் குணமாகி வீடு திரும்பிவிட்டனர்.

இருப்பினும் தினசரி சுமார் 100 பேருக்கு உமிழ்நீர் எடுக்கப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனைக்காக சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. எனவே நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை ஆய்வகம் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து தமிழக அரசு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனைக்கான ஆய்வகம் அமைக்க அனுமதி அளித்தது. இருப்பினும் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று ஏற்பட்ட நபர்களுக்கு கரூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததால், இந்த பரிசோதனை கருவிகள் அனைத்தும் கரூர் அரசு ஆஸ்பத்திரியில் பயன்படுத்தப்பட்டு வந்தன.

தற்போது அந்தந்த மாவட்டங்களிலேயே கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு உத்தரவிட்டு இருப்பதால், நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனைக்கு ஆய்வகம் உருவாக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

புதிதாக பொருத்தப்பட்ட கருவியில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு அது குறித்த வீடியோ காட்சிகள் மற்றும் தகவல்களை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் புதுடெல்லியில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு (ஐ.சி.எம்.ஆர்.) அனுப்பி இருந்தது. இதையடுத்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இந்த ஆய்வகத்துக்கு அனுமதி அளித்து உள்ளது. எனவே விரைவில் நாமக்கல்லில் கொரோனா பரிசோதனை ஆய்வகம் செயல்பட உள்ளது.

இது குறித்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துமனை டீன் சாந்தா அருள்மொழி கூறியதாவது:- கொரோனா நோய் தொற்றை கண்டறியும் பி.சி.ஆர். கருவி நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தயார் நிலையில் உள்ளது. இந்த கருவி விரைவில் பயன்பாட்டுக்கு வரும். இதற்கு தேவையான ஒப்புதலை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் பெற்று விட்டோம்.

இந்த கருவியின் உதவியுடன் நாள் ஒன்றுக்கு சுமார் 250 பேருக்கு பரிசோதனை செய்ய முடியும். தற்போது வெளிமாவட்டங்களுக்கு அனுப்பி பரிசோதனை முடிவுகளை பெற்று வருகிறோம். நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வகம் பயன்பாட்டுக்கு வந்தால் பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கருவியின் உதவியுடன் சோதனை ஓட்டமாக கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story