குமரியை சேர்ந்தவர் உள்பட கள்ளநோட்டு கும்பல் கைது ரூ.65 லட்சம் கள்ளநோட்டுகள் சிக்கின


குமரியை சேர்ந்தவர் உள்பட கள்ளநோட்டு கும்பல் கைது ரூ.65 லட்சம் கள்ளநோட்டுகள் சிக்கின
x
தினத்தந்தி 21 May 2020 7:57 AM IST (Updated: 21 May 2020 7:57 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கில் தமிழகம் முழுவதும் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற குமரி பட்டதாரி உள்பட கள்ளநோட்டு கும்பல் கைது செய்யப்பட்டனர்.

நாகர்கோவில்,

ஊரடங்கில் தமிழகம் முழுவதும் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற குமரி பட்டதாரி உள்பட கள்ளநோட்டு கும்பல் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.65 லட்சம் கள்ளநோட்டுகள் சிக்கின.

கள்ளநோட்டு கும்பல்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே கீழ துருவாசகபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 33). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு சந்தோஷ்குமார் வந்தார். கடந்த 16-ந் தேதி திருமயம் அருகே மூங்கிதானப்பட்டி டாஸ்மாக் கடையில் 200 ரூபாய் கள்ளநோட்டுகள் 2-ஐ கொடுத்து மதுபானம் வாங்க முயன்ற போது அவர் சிக்கினார்.

அவருடன் வந்த 3 பேர் தப்பி ஓடி விட்டனர். இதுதொடர்பாக திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கள்ளநோட்டு கும்பல் குறித்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.

புழக்கத்தில் விட முயற்சி

தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், சந்தோஷ்குமார் மற்றும் தப்பியோட முயற்சித்த திருமயத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (30), முகமது இப்ராகிம் (27), முகமது நசுருதீன் ஆகியோரை கைது செய்தனர். கைதான சந்தோஷ்குமாரிடம் தனிப்படையினர் விசாரித்த போது அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாயின. அதாவது சென்னையில் தன்னுடன் வேலைபார்க்கும் சுரேசிடம் இருந்து அந்த கள்ளநோட்டை வாங்கி வந்ததும், புதுக்கோட்டையில் புழக்கத்தில் விட முயன்றதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் தங்களது விசாரணையை சென்னை நோக்கி நகர்த்தினர். அங்கு சென்னை வில்லிவாக்கம் ராஜாஜிநகர் 3-வது தெருவை சேர்ந்த சுரேசை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.200, ரூ.500, ரூ.2,000 கள்ளநோட்டுகள் ரூ.49 ஆயிரத்து 900 அளவிற்கு பறிமுதல் செய்யப்பட்டன. அவரிடம் விசாரித்த போது குமரி மாவட்டம் புத்தேரி பகுதியை சேர்ந்த மணிகண்டன் கள்ளநோட்டை அச்சடித்ததாகவும், தன்னிடம் கொஞ்சம் கொடுத்து மாற்ற கூறியதாகவும் கூறினார்.

கத்தை, கத்தையாக...

இதையடுத்து தனிப்படையினர் நாகர்கோவில் விரைந்து வந்து மணிகண்டனை கைது செய்தனர். அவரிடம் இருந்து கத்தை, கத்தையாக கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் ரூ.64 லட்சத்து 91 ஆயிரத்து 540 அளவிலும், ஒரு பக்கம் மட்டும் அச்சடிக்கப்பட்ட ரூ.3 லட்சம் கள்ளநோட்டுகளும் கைப்பற்றப்பட்டன. இவை அனைத்தும் ரூ.2,000, ரூ.500, ரூ.200, ரூ.100, கள்ளநோட்டுகளாகும். ஊரடங்கு நேரத்தில் கள்ளநோட்டுகளை எளிதில் மாற்றி தமிழகம் முழுவதும் புழக்கத்தில் விட்டுவிடலாம் என முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

இந்த வழக்கில் மூளையாக செயல்பட்டது மணிகண்டன் தான் என போலீசார் கூறினர். எம்.பி.ஏ. படித்து முடித்துள்ள மணிகண்டன் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். குமரியில் கள்ளநோட்டுகளை தயாரித்து சென்னையில் தனக்கு தெரிந்தவர்கள் மூலம் கள்ளநோட்டுகளை கொடுத்துள்ளார். ரூ.50 ஆயிரத்திற்கு நல்ல நோட்டு கொடுத்தால் ரூ.1 லட்சம் கள்ளநோட்டுகள் என்ற அடிப்படையில் மணிகண்டன் இந்த தொழிலை முதன் முதலாக தொடங்கி உள்ளதாக தெரிவித்தனர். அந்த அடிப்படையில் தான் குறிப்பிட்ட தொகையை கொடுத்து கள்ளநோட்டை சென்னை, புதுக்கோட்டையை சேர்ந்தவர்கள் வாங்கி உள்ளனர்.

மடிக்கணினி பறிமுதல்

கள்ளநோட்டு தயார் செய்ய பயன்படுத்திய லேப்-டாப், ஸ்கேனர், பிரிண்டர், கட்டிங் மிஷின் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் திறம்பட செயல்பட்ட தனிப்படையினரை போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் பாராட்டினார்.

Next Story