மேட்டூர் அணையில் மதகுகள் சீரமைக்கும் பணி தீவிரம்
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதற்கான முன்னேற்பாடுகளை பொதுப்பணித்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதையொட்டி அணையில் மதகுகள் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேட்டூர்,
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக அடுத்த மாதம் (ஜூன்) 12-ந் தேதி தண்ணீர் திறந்து விட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அணையில் இருந்து பாசனத்துக்காக திறந்து விடப்படும் தண்ணீர் அணையின் மேல் மட்ட மதகு, கீழ்மட்ட மதகு மற்றும் அணையின் அருகே அமைந்துள்ள நீர்மின்நிலையங்கள் வழியாக வெளியேற்றப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் தண்ணீர் திறப்புக்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வரும் மேட்டூர் பொதுப்பணித்துறையினர் அணையின் மதகுகளை சீரமைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மதகுகளுக்கு வர்ணம் மற்றும் கிரீஸ் பூசுவது உள்ளிட்ட பராமரிப்பு பணிகளையும் மேற்கொண்டு உள்ளனர்.
இந்த நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 100 அடியாக இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. அதே நேரத்தில் அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் வினாடிக்கு 1,186 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 1,336 கனஅடியாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story