சின்னசேலம் பகுதியில் அடுத்தடுத்த வீடுகளில் நகை-பணம் திருட்டு


சின்னசேலம் பகுதியில் அடுத்தடுத்த வீடுகளில் நகை-பணம் திருட்டு
x
தினத்தந்தி 21 May 2020 8:46 AM IST (Updated: 21 May 2020 8:46 AM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் பகுதியில் அடுத்தடுத்த வீடுகளில் நகை-பணம் திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

சின்னசேலம், 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தாகம்தீர்த்தாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பச்சமுத்து மனைவி பொன்னி. இவர் நேற்று முன்தினம் தனது வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். 

பின்னர் நேற்று காலை வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 8 பவுன் நகை, ரூ.20 ஆயிரத்தை காணவில்லை. இதேபோல் அருகில் உள்ள அவரது உறவினர்களான பழனிமுத்து மனைவி முத்தம்மாள் (வயது 47), கந்தன் மகன் வீரமுத்து(28) ஆகியோரின் வீடுகளில் இருந்த பீரோக்களும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 6 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் ஆகியவை காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்த சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலமுரளி பிரபாகரன், ஏழுமலை மற்றும் போலீசார் திருட்டு நடந்த வீடுகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஒரே நாளில் அடுத்தடுத்த 3 வீடுகளில் திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

Next Story