முக கவசம் அணிந்து வந்தால் மட்டுமே மளிகை பொருட்கள் வணிகர் சங்க பேரவை அறிவிப்பு


முக கவசம் அணிந்து வந்தால் மட்டுமே மளிகை பொருட்கள்  வணிகர் சங்க பேரவை அறிவிப்பு
x
தினத்தந்தி 21 May 2020 8:56 AM IST (Updated: 21 May 2020 8:56 AM IST)
t-max-icont-min-icon

முக கவசம் அணிந்து வந்தால் மட்டுமே மளிகை பொருட்கள் வழங்கப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மதுரை, 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 31-ந் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மளிகை கடைகள் குறிப்பிட்ட கால நேரத்தில் மட்டும் இயங்கி வருகிறது. மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மளிகை கடைகள் இயங்கி வருகிறது. இந்த நிலையில் மதுரையில் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், வணிகர்கள் சங்கத்தின் சார்பில் பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரவை மதுரை மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் கூறியதாவது:-

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் த.வெள்ளையன் ஆணைக்கு இணங்க ஊரடங்கு காலத்தில் தூய்மை பணியாளர்கள், ஏழை, எளிய மக்கள் உள்ளிட்டோருக்கு அத்தியாவசிய பொருட்கள், கபசுர குடிநீர் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது.

முக கவசம்

இந்தநிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் கடைக்கு பொருட்கள் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிந்து தான் வரவேண்டும். முக கவசம் அணிந்து வராவிட்டால் மளிகை பொருட்கள் வழங்கப்படமாட்டாது. வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பொது இடத்தில் எச்சில் துப்பக் கூடாது என்பது போன்ற பல்வேறு நிபந்தனைகளை அறிவித்து இருக்கிறோம். இதனை கடைபிடிப்பவர்களுக்கு மட்டுமே பொருட்கள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story