திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் தங்கி இருந்த 1,425 தொழிலாளர்கள் சிறப்பு ரெயிலில் பீகார் பயணம்
திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் தங்கி இருந்த 1,425 தொழிலாளர்கள் பீகாருக்கு குடும்பத்துடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருச்சி,
திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் தங்கி இருந்த 1,425 தொழிலாளர்கள் பீகாருக்கு குடும்பத்துடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.
வடமாநில தொழிலாளர்கள்
கொரோனாவிற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நான்காவது முறையாக நீட்டிக்கப்பட்டாலும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களது சொந்த மாநிலத்திற்கு செல்வதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தங்கி இருந்து வேலை செய்து வந்த வடமாநில தொழிலாளர்கள் சிறப்பு ரெயில்கள் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள்.
திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் தங்கி இருந்த சுமார் 1,500 தொழிலாளர்கள் கடந்த 17-ந்தேதி இரவு அவர்களது சொந்த மாநிலமான உத்தரபிரதேசத்திற்கு சிறப்பு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். மறுநாள் தமிழகத்தின் 23 மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் டெல்லியில் இருந்து தனி ரெயில் மூலம் திருச்சிக்கு அழைத்து வரப்பட்டனர்.
பீகார் தொழிலாளர்கள்
இந்நிலையில் நேற்று இரண்டாவது கட்டமாக 1,425 தொழிலாளர்கள் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த தொழிலாளர்கள் அனைவரும் திருச்சி மாவட்டத்தில் லால்குடி, மண்ணச்சநல்லூர், துறையூர், திருவெறும்பூர், ஜீயபுரம் பகுதிகளிலும், பெரம்பலூர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தங்கி இருந்து வேலை செய்த பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
திருச்சி மாவட்டத்தில் வசித்து வந்த 1,009 பேர், பெரம்பலூர் மாவட்டத்தில் வசித்த 416 பேர் என மொத்தம் 1,425 பேர் 22 அரசு போக்குவரத்து கழக பஸ்களில் நேற்று காலை அழைத்து வரப்பட்டனர். ஜங்ஷன் ரெயில் நிலையத்தின் அருகில் அந்த பஸ்கள் வந்து நின்றதும் அதில் இருந்து தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன், பெட்டி, படுக்கைகள் மற்றும் தட்டுமுட்டு சாமான்களுடன் இறங்கினார்கள். பின்னர் அவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து வரிசையாக நிற்க வைக்கப்பட்டனர்.
சிறப்பு ரெயிலில் பயணம்
ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்குள் அவர்கள் வந்ததும் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு அவர்களுக்கு மதிய உணவு பொட்டலங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை வழங்கினார். அதன் பின்னர் அவர்கள் ரெயில்பெட்டிகளில் ஏறி அமர்ந்தனர். மதியம் 1.30 மணி அளவில் அந்த சிறப்பு ரெயில் பீகார் மாநிலம் மோதிகாரி என்ற இடத்திற்கு புறப்பட்டு சென்றது. இந்த நிகழ்ச்சியில் திருச்சி அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் ராஜ்மோகன், ரெயில்வே அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பீகார் மாநில தொழிலாளர்கள் வழியனுப்பி வைக்கப்பட்டதை தொடர்ந்து ஜங்ஷன் ரெயில் நிலைய பகுதியில் போலீசார் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர். வாகன போக்குவரத்தும் வேறு வழியாக திருப்பி விடப்பட்டது.
Related Tags :
Next Story