ஒரு ரூபாய்க்கு இட்லி, டீ, வடை விற்பனை செய்யும் மூதாட்டி


ஒரு ரூபாய்க்கு இட்லி, டீ, வடை விற்பனை செய்யும் மூதாட்டி
x
தினத்தந்தி 21 May 2020 10:51 AM IST (Updated: 21 May 2020 10:51 AM IST)
t-max-icont-min-icon

இட்லி, வடை, டீ போன்றவற்றை ஒரு ரூபாய்க்கு விற்று, மூதாட்டி ஒருவர் மக்களுக்கு சேவை செய்து வருகிறார்.

கமுதி, 

கமுதி அருகே கீழராமநதி கிராமத்தை சேர்ந்தவர் வீராயி (வயது 67). கடந்த பல வருடங்களுக்கு முன்பு, இவர் கணவனை இழந்து உணவுக்காக தவித்துள்ளார். அந்த சமயத்தில் பிறரிடம் சாப்பாட்டுக்காக கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். தன்னைப்போல யாரும் உணவுக்காக கையேந்தும் நிலைக்கு ஆளாகக்கூடாது என எண்ணிய அவர், தன் வீட்டு வாசலிலேயே சிறிய இட்லி கடையை தொடங்கினார். தொடக்கத்தில் 25 பைசாவிற்கு ஒரு இட்லி, டீ, வடை போன்றவற்றை விற்பனை செய்தார். அதன் பின் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப சிறிது சிறிதாக தனது கடையில் விற்கப்படும் உணவுப்பொருளின் விலையை உயர்த்தினார்.

கடந்த 7 ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு இட்லி, வடை, டீயை தினமும் காலையில் மட்டும் விற்பனை செய்கிறார். பின்பு நூறு நாள் வேலைக்கு சென்று விடுகிறார். ஒரு நாளைக்கு ரூ.400-க்கு மட்டுமே இட்லி, வடை, டீயை விற்பனை செய்து வரும் வீராயி, மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பியதும் கை உரலில், இட்லிக்கான மாவை தயாரிக்கிறார். கமுதியில் மற்ற கடைகளில் ஒரு டீ ரூ.10-க்கும் விற்பனையாகிறது. அதே போல இட்லி, வடையும் இந்த மூதாட்டியின் கடையை விட பல மடங்கு கூடுதலான விலையில்தான் விற்கப்படுகின்றன.

மலிவு விலைக்கு உணவு கொடுப்பதால் கீழராமநதி பள்ளி, கல்லூரி மாணவர்கள், அக்கம்பக்கத்து கிராம மக்கள் கீழராமநதிக்கு வந்து ஒரு ரூபாய் இட்லி, டீ, வடையை ருசித்து விட்டு செல்கின்றனர்.

ஆயுள் அதிகரிப்பு

இதுகுறித்து வீராயி கூறும்போது, “30 ஆண்டுகளாக குறைந்த விலைக்கு உணவு கொடுக்கிறேன். தற்போது ஒரு ரூபாய்க்கு இட்லி, டீ, வடை விற்பனை செய்து வருகிறேன். 25 பைசா செல்லாது என்றவுடன், 50 பைசாவிற்கும், 50 பைசா செல்லாது என்றவுடன் ஒரு ரூபாய்க்கு சட்னி சாம்பாருடன் இட்லியும், டீ, வடைகளை விற்பனை செய்கிறேன். எனக்கு வியாபாரம் பெரிதல்ல. மக்களுக்கு வீட்டு சமையல் ருசியுடன், லாபநோக்கில்லாமல், பசி தீரவேண்டும் என்ற எண்ணத்தில், காலை ஒருவேளை மட்டும் என் வீட்டு தாழ்வாரத்தில் கடையை நடத்தி வருகிறேன்.

கூலி தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவேண்டும் என்பதால் நான் மட்டுமே வியாபாரத்தில் ஈடுபடுகிறேன். விறகு வெட்டிக்கொண்டு வந்து போட முடியவில்லை. இதனால் கியாஸ் சிலிண்டரில் சமையல் செய்து சேவையாற்றி வருவது எனக்கு மனநிறைவை தருகிறது. மக்களுக்கு சேவையாற்றுவதால் இந்த பணியை மகிழ்ச்சியுடன் செய்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story