வட மாநில தொழிலாளர்களை அனுப்பி வைக்கும் பணி தொடரும்; கலெக்டர் சி.கதிரவன் பேட்டி


வட மாநில தொழிலாளர்களை அனுப்பி வைக்கும் பணி தொடரும்; கலெக்டர் சி.கதிரவன் பேட்டி
x
தினத்தந்தி 21 May 2020 12:02 PM IST (Updated: 21 May 2020 12:02 PM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் இருந்து வடமாநில தொழிலாளர்களை அனுப்பி வைக்கும் பணி தொடரும் என்று கலெக்டர் சி.கதிரவன் கூறினார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் இருந்து உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 1,464 தொழிலாளர்கள் நேற்று ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதற்கான பணிகளை பார்வையிட்ட கலெக்டர் சி.கதிரவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 35 நாட்களாக கொரோனா புதிய தொற்று எதுவும் இல்லை. இருப்பினும் தொடர்ந்து தீவிரமாக கொரோனா தடுப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் நடந்து வருகின்றன.

வட மாநிலங்களில் இருந்து ஈரோடு மாவட்டத்துக்கு இதுவரை 2 ஆயிரத்து 400 பேர் வந்து உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு வீடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறார்கள்.

இதுபோல் பிற மாவட்டங்களில் இருந்து வந்த 3 ஆயிரத்து 460 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களுக்கு கொரோனா இல்லை என்ற பரிசோதனை முடிவு பெறப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை.

இந்த நிலையில் வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களை அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பும் பணி தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே 1,600 தொழிலாளர்கள் அவர்கள் பணியாற்றிய நிறுவனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். இப்போது 1,464 பேர் அனுப்பப்படுகிறார்கள். மொத்தமாக 17 ஆயிரம் பேர் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்து இருந்தனர். தற்போது தொழிற்சாலைகள் திறந்து பணி தொடங்கி இருப்பதால் பலரும் வேலை பார்க்கத்தொடங்கி இருக்கிறார்கள். இதில் செல்வதற்கு விருப்பம் தெரிவிக்கிறவர்களின் பட்டியல் எடுக்கப்பட்டு அவர்கள் கண்டிப்பாக சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இந்த பணி இன்னும் தொடரும்.

இவ்வாறு கலெக்டர் சி.கதிரவன் கூறினார்.

பேட்டியின்போது ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்திகணேசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மு.பாலகணேஷ் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் இருந்தனர்.

முன்னதாக பணியில் இருந்த அதிகாரிகளிடம் வட மாநில தொழிலாளர்கள் அச்சப்படும் வகையில் அதிகாரிகள் நடந்து கொள்ளக்கூடாது. அவர்கள் நிம்மதியாக தங்கள் ஊர் சென்று சேர ஆறுதலாகவும், அன்பாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.

Next Story