கர்நாடகத்தில் 26, 27-ந்தேதிகளில் 50 கோவில்களில் பக்தர்கள் பூஜை செய்ய ஆன்லைன் மூலம் சேவை மந்திரி கோட்டா சீனிவாசபூஜாரி தகவல்


கர்நாடகத்தில் 26, 27-ந்தேதிகளில் 50 கோவில்களில் பக்தர்கள் பூஜை செய்ய ஆன்லைன் மூலம் சேவை மந்திரி கோட்டா சீனிவாசபூஜாரி தகவல்
x
தினத்தந்தி 21 May 2020 10:15 PM GMT (Updated: 21 May 2020 8:59 PM GMT)

கர்நாடகத்தில் 26, 27-ந் தேதிகளில் 50 கோவில்களில் பக்தர்கள் பூஜை செய்ய ஆன்-லைன் மூலம் சேவை தொடங்கப்படுகிறது என்று மந்திரி கோட்டா சீனிவாச பூஜாரி தெரிவித்துள்ளார்.

மங்களூரு,

கர்நாடக அறநிலையத் துறை மந்திரியும், தட்சிணகன்னடா மாவட்ட பொறுப்பு மந்திரியுமான கோட்டா சீனிவாச பூஜாரி உடுப்பியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் கோவில் பூசாரிகள் வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு வழங்க வேண்டிய 3 மாத நிலுவை சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக மாநிலத்தில் 26 ஆயிரத்து 700 கோவில்களுக்கு முதல்-மந்திரி எடியூரப்பாவின் ஆலோசனையின் படி ரூ.33.65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டு இருந்தாலும், கோவில்களில் பூஜைகள் தொடர்ந்து நடந்த வருகிறது. இதனால் தங்களால் சாமியை தரிசனம் செய்ய முடியவில்லையே என்று ஆதங்கத்தில் பக்தர்கள் உள்ளனர். வருகிற 26, 27-ந்தேதிகளில் அறநிலையத் துறை கோவில்களில் ஆன்-லைன் மூலம் சேவை தொடங்கப்படுகிறது. அதாவது கோவிலில் சாமிக்கு பூஜை செய்ய விரும்புபவர்கள் ஆன்-லைன் மூலம் பணம் செலுத்த வேண்டும். பூஜை நடத்தி அவர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று பிரசாதம் வழங்கப்படும். கோவில்களில் நடைபெறும் பூஜைகளை ஆன்-லைனில் யூ-டியூப், பேஸ்புக் மற்றும் சமூகவலைத்தளங்களில் ஒளிபரப்பு செய்ய ஆலோசித்து வருகிறோம். அதாவது கோவிலில் சாமிக்கு நடைபெறும் அபிஷேகம், தீபாராதனை, அர்ச்சனை உள்பட பல்வேறு நிகழ்வுகள் ஒளிபரப்பு செய்யப்படும்.

இந்த நிகழ்வுகளை 15 மாவட்டங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய தனியார் நிறுவனம் முன் வந்துள்ளது. இருப்பினும் அனைத்து மாவட்டங்களிலும் ஆன்-லைனில் பக்தர்கள் சாமியை தரிசனம் செய்ய திட்டமிட்டு உள்ளோம். மாநிலத்தில் முதல் முறையான 50 கோவில்களில் ஆன்-லைன் மூலம் பூஜை சேவை தொடங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி குக்கே சுப்பிரமணியா கோவில், கொல்லூர் மூகாம்பிகை கோவில், மந்தார்த்தி பகுதியில் துர்கா பரமேஸ்வரி கோவில், பெங்களூரு பனசங்கரி கோவில், கட்டீல் துர்காபரமேஸ்வரி கோவில், பெலகாவி சவுதத்தி எல்லம்மா கோவில், நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் கோவில், மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் உள்பட 50 கோவில்களில் ஆன்-லைன் மூலம் பூஜை சேவை வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story