ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் காங்கிரசார் அஞ்சலி - போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு


ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் காங்கிரசார் அஞ்சலி - போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 21 May 2020 11:45 PM GMT (Updated: 21 May 2020 9:23 PM GMT)

ராஜீவ்காந்தி நினைவிடத்தில் நேற்று காங்கிரசார் அஞ்சலி செலுத்தினர். முன்னதாக போலீசார் அனுமதி மறுத்ததால் காங்கிரசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீபெரும்புதூர், 

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவிடம் அமைந்துள்ளது. நேற்று அவரது நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அனுமதி மறுக்கப்பட்டது. மாநில தலைவர், மாவட்ட தலைவர், நகர தலைவர் என 3 பேருக்கு மட்டுமே போலீசார் அனுமதி வழங்கினர். இந்தநிலையில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடம் நோக்கி காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 9 மணிக்கு வர தொடங்கினர்.

நினைவிடத்தில் ஸ்ரீபெரும்புதூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த காங்கிரஸ் நிர்வாகிகளை போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளே செல்ல அனுமதி மறுத்தனர்.

இதனால் அங்கு குவிந்த காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தங்களை நினைவிடத்திற்குள் அனுமதிக்கவில்லை என்றால் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என்று கோஷம் எழுப்பினர்.

தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காங்கிரஸ் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமூக இடைவெளியுடன் தகுந்த பாதுகாப்புடன் 10 பேர் உள்ளே சென்று அஞ்சலி செலுத்துங்கள் அவர்கள் வெளியில் வந்தவுடன் மற்ற 10 பேர் உள்ளே செல்லலாம் என்று நிபந்தனையுடன் அனுமதி அளித்தனர்.

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராஜீவ்காந்தி நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசு, தங்கபாலு, எஸ்.சி.எஸ்.டி. மாநில தலைவர் செல்வபெருந்தகை, நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார், காஞ்சீபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ரூபி.மனோகரன், நகர காங்கிரஸ் கட்சி தலைவர் அருள்ராஜ், அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் தமிழ்செல்வன், ராஜீவ் காந்தி நினைவிட பொறுப்பாளர் முருகானந்தம் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

Next Story