ரெயில் தண்டவாளங்களை பராமரிக்கும் பணிகள் தீவிரம்
கோவையில் ரெயில் தண்டவாள பராமரிப்பு பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோவை,
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அத்தியாவசிய கடைகளான மளிகை மற்றும் காய்கறி கடைகளை தவிர மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. ஆனால் சரக்கு ரெயில்கள் மட்டும் வழக்கம் போல இயங்கின.
இந்த நிலையில் ரெயில் தண்டவாள பராமரிப்பு பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான பணியாளர்கள் 2 தண்டவாளங்கள் இடையே உள்ள அளவு சரியாக இருக்கிறதா? தண்டவாளம் தேய்ந்து இருக்கிறதா? பிஷ் பிளேட்டுகள் சரியாக பொருத்தப்பட்டுள்ளனவா? என்று பணியாளர்கள் சரிபார்த்து வருகிறார்கள்.
இதுகுறித்து கோவை ரெயில் நிலைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ரெயில் தண்டவாள பராமரிப்பு பணிகள் அத்தியாவசிய பணிகள் என்பதால் அதை ஊரடங்கு நேரத்திலும் நிறுத்தவில்லை. இதற்காக தனியாக அனுமதி பெறப்பட்டது. பயணிகள் ரெயில்கள் ஓடவில்லையென்றாலும், சரக்கு ரெயில்கள் இயக்கப்படுவதால் ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் அவசியமான பணி என்ற அடிப்படையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர்கள் சமூக இடைவெளியுடன் நின்று முகக்கவசம் அணிந்து பணியாற்றுகிறார்கள்.
கேரளாவில் இருந்து வந்த பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகவில்லை. அப்படியிருந்தாலும் அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னரே பணியில் சேர அனுமதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story