கொரோனா தாக்கம் எதிரொலி: கோவையில் வெறிச்சோடிய கடைவீதிகள் டாஸ்மாக் கடையிலும் விற்பனை சரிவு


கொரோனா தாக்கம் எதிரொலி:  கோவையில் வெறிச்சோடிய கடைவீதிகள்  டாஸ்மாக் கடையிலும் விற்பனை சரிவு
x
தினத்தந்தி 22 May 2020 4:39 AM IST (Updated: 22 May 2020 4:39 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தாக்கம் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் கோவையில் கடை வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. டாஸ்மாக் கடைகளிலும் விற்பனை சரிந்து வருகிறது.

கோவை,

கொரோனா தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் கடந்த 45 நாட்களுக்கும் மேலாக அனைத்து தொழில்களும் முடங்கின. இதன் காரணமாக பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து மக்களின் வாங்கும் சக்தி வெகுவாக குறைந்து விட்டது.

தற்போது ஊரடங்கு சற்று தளர்த்தப்பட்டுள்ளது. கடைகள் மற்றும் தொழிற்சாலைகள் இயங்கத் தொடங்கி விட்டன. ஊரடங்கு தளர்த்தப்பட்டவுடன் மக்களிடம் எழுச்சி காணப்பட்டது, சாலைகளில் வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் ஓடின.

ஆனால் தற்போது கடைவீதிகளில் மக்கள் கூட்டத்தை அதிகமாக காணமுடிவதில்லை. பெரிய ஜவுளி நிறுவனங்கள் திறக்கப்படவில்லை. ஆனால் சிறிய கடைகள் அனைத்தும் திறந்துள்ளன. வருகிற 25-ந் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடைவீதிகளில் ரம்ஜான் ஜவுளிகள் மற்றும் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதும். ஆனால் நேற்று கடைவீதிகளில் மக்கள் கூட்டமே இல்லை. முன்பு ரம்ஜானுக்கு ஒரு வாரத்துக்கு முன்பே டவுன்ஹால் மற்றும் கிராஸ்கட் சாலைகளில் உள்ள கடைகளில் விற்பனை களை கட்டத் தொடங்கும். கொரோனா தாக்கம் காரணமாக பணபுழக்கம் இல்லாததால் பொருட்கள் வாங்க மக்கள் வரவில்லை.

எப்போது சரியாகும்

இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

கோவையில் ரம்ஜான் மற்றும் வார விடுமுறை நாட்களில் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். தற்போது ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டபோதும் கடைகளில் கூட்டம் இல்லை. தொழிற்சாலைகள் மற்றும் டாக்சிகள் தற்போது தான் இயங்க தொடங்கியுள்ளன. அவையெல்லாம் செயல்பட்டு ஒரு உறுதியான நிலைக்கு வந்த பின்னர் தான் மக்கள் கைகளில் பணப்புழக்கம் அதிகரித்தால்தான் நிலைமை சீராகும் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

டாஸ்மாக் கடைகளில் விற்பனை குறைந்தது

கோவை மாவட்டத்தில் உள்ள 293 டாஸ்மாக் கடைகளும் தற்போது திறக்கப்பட்டுள்ளன. கடைகள் திறந்து ஒரு சில நாட்கள் மட்டும் விற்பனை அதிகமாக காணப்பட்டது. அதன்பின்னர் கூட்டம் வரவில்லை. விற்பனை நேரம் 2 மணி நேரம் அதிகரித்த போதிலும் கூட்டம் இல்லை. இனி டாஸ்மாக் கடைகள் மூட முடியாது என்று அனைவருக்கும் தெரிந்து விட்டது. எனவே பொறுமையாக, தேவைப்படும்போது மதுபாட்டில்களை வாங்கிக் கொள்ளலாம் என்று பலர் நினைக்கிறார்கள்.

இதுகுறித்து டாஸ்மாக் நிறுவன ஊழியர் ஒருவர் கூறியதாவது:-

கொரோனா பாதிப்பிற்கு முன்பு இருந்ததை விட தற்போது டாஸ்மாக் விற்பனை குறைந்துள்ளது. இதற்கு காரணம் மக்களிடம் பணபுழக்கம் இல்லை என்று கூறப்படுகிறது. மதுவாங்குபவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகளில் விற்பனை சரிந்து வருகிறது. ஊரடங்கிற்கு பிறகு கடைகள் திறந்தபோது கூட்டம் அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது நாள் ஆக ஆக கூட்டம் குறைய தொடங்கியுள்ளது.

மாவட்ட அளவில் விற்பனை

முன்பு ஒவ்வொரு கடையிலும் எவ்வளவு விற்பனை ஆனது என்பது குறித்து மண்டல அலுவலகத்துக்கு எஸ்.எம்.எஸ். மூலம் விற்பனை முடிந்த பின்னர் தெரியப்படுத்துவோம். தற்போது அனைத்து கடைக்காரர்களும் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவித்து விடுகிறார்கள். இதனால் மாவட்டத்தில் எவ்வளவு விற்பனையானது என்பது தெரியவாய்ப்பில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story