கால்நடைகளுக்கு பெரிய அம்மை நோய்; கால்நடை பராமரிப்பு துறை எச்சரிக்கை


கால்நடைகளுக்கு பெரிய அம்மை நோய்; கால்நடை பராமரிப்பு துறை எச்சரிக்கை
x
தினத்தந்தி 21 May 2020 11:15 PM GMT (Updated: 21 May 2020 11:15 PM GMT)

கோடை காலத்தில் வெப்பநிலை உச்சத்தில் உள்ளதால் கால்நடைகளுக்க பெரிய அம்மை நோய் பரவுகிறது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி, 

புதுச்சேரி அரசின் கால்நடை பராமரிப்பு துறை தொழில்நுட்ப வல்லுனரும், பிராணிகள் நல மற்றும் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த டாக்டருமான செல்லமுத்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோடைகாலமான தற்போது வெப்பம் உச்ச நிலையில் உள்ளது. இதனால் கால்நடைகளுக்கு பெரிய அம்மை நோய் பரவுகிறது. கால்நடை விவசாயிகள் தங்கள் கால் நடைகளை கோடை வெப்ப சுழற்சி மற்றும் அம்மை நோயில் இருந்து காப்பாற்றிக்கொள்ள மதியம் 11 மணியில் இருந்து மாலை 3 மணி வரை கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது.

கால்நடைகளுக்கு தீவனம் வழங்கும்போது 4 வேளைகளாக பிரித்து கொடுக்க வேண்டும். தினமும் காலை மற்றும் மாலை வேளையில் கால் நடைகளின் மீது தண்ணீர் ஊற்றி அதன் வெப்பத்தை தணிக்க வேண்டும். மேய்ச்சலின் போது அவ்வப்போது தாகத்தை தணிக்க அருகாமையில் ஒரு தற்காலிக குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும். சுத்தமான குடிநீர் மற்றும் சரிவிகித உணவு அளிப்பதன் மூலம் கோடை வெப்பத்தில் இருந்து கால்நடைகளை காப்பாற்றலாம்.

மேய்ச்சலின் போது நோய்வாய்ப்பட்ட கால்நடைகளிடம் இருந்து ஆரோக்கியமாக உள்ள கால்நடைகளுக்கு இந்த நோய் பரவுகிறது. அவ்வாறு பாதிக்கப்பட்ட கால்நடைகளை தனிமைப்படுத்தி தங்களுடைய பகுதியில் உள்ள மருத்துவரை அணுகி சிகிச்சை அளிக்க வேண்டும்.

இந்த அம்மை நோய் என்பது ஒரு வைரஸ் தொற்று. ஆகையால் இடைவெளி விட்டு கொட்டகையில் கட்டவேண்டும். தினமும் அதன் ஆரோக்கியத்தை நாம் கவனிக்க வேண்டும். தோல் நோய், ஒவ்வாமை நோய்க்கு சிறந்த மருத்துவம் மஞ்சள், வேப்பிலை, குப்பைமேனி, மருதாணி இலை ஆகியவற்றை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து கால்நடைகளின் தோளில் பூசிவர தோல் ஒவ்வாமை முற்றிலும் குணமாகும். கால்நடைகளுக்கு அதிக குடிநீர் கொடுப்பதன் மூலம் நீர்ச்சத்து குறைபாடு இல்லாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

வாரத்தில் ஒருமுறையாவது செல்லப்பிராணிகளை குளிக்க வைக்க வேண்டும். கோடை வெப்பம் உச்சத்தில் உள்ளதால் வழக்கமான முறையில் உணவு எடுத்துக்கொள்ளாமல் ஒருவேளை மட்டுமே உணவு எடுத்துக்கொள்ள நேரிடும். ஆதலால் குறைந்த அளவு உணவு கொடுக்க வேண்டும். செல்லப்பிராணிகளின் வாயில் இருந்து உமிழ்நீர் சுரந்துகொண்டே இருக்கும். இது ஒரு இயற்கையான நிகழ்வு. செல்லப் பிராணி அதன் வெப்பத்தை வெளியேற்றுவதற்கு இப்படி செய்யும். தங்கள் செல்லப்பிராணிகளுக்கு ஆண்டுக்கு ஒரு முறை போடப்படும் ரேபீஸ் தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும். கோடை வெப்பத்தினால் அதன் குணாதிசயங்கள் சற்று மாறுபட்டு காணப்படும்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story