மாவட்ட செய்திகள்

வெளிமாநிலங்களில் இருந்து தூத்துக்குடிக்கு 1,494 பேர் வந்து உள்ளனர் - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல் + "||" + 1,494 people have come to Thoothukudi from outer areas - Collector Sandeep Nanduri

வெளிமாநிலங்களில் இருந்து தூத்துக்குடிக்கு 1,494 பேர் வந்து உள்ளனர் - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்

வெளிமாநிலங்களில் இருந்து தூத்துக்குடிக்கு 1,494 பேர் வந்து உள்ளனர் - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
வெளி மாநிலங்களில் இருந்து தூத்துக்குடிக்கு 1,494 பேர் வந்து உள்ளனர் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார். இதுகுறித்து அவர் கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களில் 34 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். சிகிச்சை பலனின்றி 2 பேர் இறந்து உள்ளனர். தற்போது 77 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மராட்டியம், குஜராத், சென்னையில் இருந்து வந்தவர்கள் சிகிச்சையில் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்துக்கு தினமும் சுமார் 120 முதல் 150 பேர் வரை வெளிமாநிலங்களில் இருந்து வருகிறார்கள். மாவட்டத்தில் உள்ள பிரதான சாலைகளில் 15 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

மாவட்டத்தில் 9 இடங்களில் தனிமைப்படுத்தும் முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதில் 700 பேர் தங்குவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அவர்களுக்கு உணவு, மருத்துவ வசதி ஆகியவற்றை அளித்திடும் பணியில் பொது சுகாதாரத்துறை அலுவலர்கள், வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது 13 நோய் கட்டுப்பாட்டு மண்டலங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடந்து வருகிறது. சுகாதாரத்துறை அலுவலர்கள் வீடு வீடுகளாக சென்று சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் உள்ள நபர்களின் விவரங்களை சேகரித்து வருகின்றனர். மேலும் கொரோனா தொற்று உள்ள நபர்களின் தொடர்புகள் கண்டறிந்து அவர்களுக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

தூத்துக்குடி மாவட்டத்துக்கு இதுவரை மராட்டியத்தில் இருந்து 1,000 பேர், கர்நாடகாவில் இருந்து 176 பேர், குஜராத்தில் இருந்து 75 பேர் உள்பட மொத்தம் 1,494 பேர் வந்து உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து பீகார், ஜார்கண்ட், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு 1,919 பேர் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் சொந்த ஊருக்கு செல்ல விருப்பம் தெரிவித்த தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளனர். இதற்காக இந்த வாரத்தில் பஞ்சாப், உத்தரபிரதேசம் மற்றும் அரியானா மாநிலத்துக்கு 3 சிறப்பு ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஊரகப்பகுதியில் தொழிற்சாலைகள் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

20 ஆயிரம் பொதுப்பணித்துறை சார்ந்த பணிகள், சாலை பணிகள், பேரூராட்சியில் ஒப்பந்த அடிப்படையிலான பணிகள் மேற்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசின் உத்தரவுப்படி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் 100 சதவீதம் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரம் பணியாளர்கள் தினமும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சுகாதாரத்துறை மூலம் வெளியிடப்பட்டு உள்ள திருத்தப்பட்ட அரசாணையில் ஒரு பகுதியில் ஒரு நபருக்கு மட்டும் கொரோனா தொற்று ஏற்பட்டால் அவரை வீட்டிலேயே தனிமைப்படுத்திட தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒரு பகுதியில் 5 நபர்களுக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் மட்டும் தான் அந்த பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்றப்படுகிறது.

திருச்செந்தூர் பகுதியில் ஒருவருக்கும், கோவில்பட்டியில் 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்களுக்கு யார் மூலம் தொற்று ஏற்பட்டு உள்ளது என்பதை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கொரோனா சமூகப்பரவல் இல்லை. கொரோனா தொற்று பரவலை தடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.