திருப்பூர் மாவட்டத்தில் ரூ.14 கோடியில் குடிமராமத்து பணிகள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்


திருப்பூர் மாவட்டத்தில்  ரூ.14 கோடியில் குடிமராமத்து பணிகள்  அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 22 May 2020 6:57 AM IST (Updated: 22 May 2020 6:57 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் ரூ.14 கோடியில் குடிமராமத்து பணிகள் நடைபெற உள்ளது. இப்பணிகளை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

குடிமங்கலம்,

பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரதுறையின் சார்பில் இந்த ஆண்டு திருப்பூர் மாவட்டத்தில் 132 குடிமராமத்து பணிகள் ரூ.13 கோடியே 93 லட்சம் செலவில் நடைபெற உள்ளன. குடிமங்கலம் ஒன்றியம் சிக்கனூத்து பகுதியில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் முன்னிலையில் தொடக்க விழா நடந்தது.

கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்து பேசியதாவது:- முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா ஆசியுடன் தமிழக முதல்-அமைச்சர் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

தமிழகத்தின் நீர் ஆதாரங்களை செம்மைப்படுத்தி விவசாயிகள் பயன்பெறும் வகையில் குடிமராமத்து பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்படுகின்றன. 2020-2021-ம் ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் 1,387 பணிகள் ரூ.499 கோடியே 97 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளன.

ரூ.178 கோடி ஒதுக்கீடு

குடிமராமத்து திட்டத்தின் மூலம் கால்வாய்களில் வளர்ந்துள்ள செடி,கொடி,முட்புதர்களை அகற்றுதல்,கால்வாய்களை தூர்வாரி சுத்தம் செய்தல், கால்வாயில் சேதமடைந்துள்ள குறுக்கு சட்டங்களை பழுது பார்த்தல், மடைகளை சீரமைத்தல், கரைகளை பலப்படுத்துதல், குளங்களின் கரைகளை பலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

குடிமராமத்து திட்டத்தின் மூலம் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், காங்கேயம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 1 லட்சத்து 29 ஆயிரத்து 336 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இந்த ஆண்டு திருப்பூர் மாவட்டத்தில் பாசனதிட்டத்திற்கு ரூ.178 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அரசின் திட்டங்களை விவசாயிகள் பயன்படுத்தி பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் பரம்பிக்குளம்-ஆழியாறு வடிநில கண்காணிப்பாளர் முத்துசாமி, ஆர்.டி.ஓ.ரவிக்குமார், ஆணையாளர் செல்டன், மாவட்ட கவுன்சிலர் பாண்டியன் ஒன்றிய குழு தலைவர் சுகந்தி முரளி, துணைத்தலைவர் புஸ்பராஜ், ஒன்றிய கவுன்சிலர் தமயந்தி மாசிலாமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story