பீகார் மாநில தொழிலாளர்கள் ரெயிலில் அனுப்பி வைப்பு
பரமத்திவேலூர் தாலுகா பகுதியில் தங்கி வேலை பார்த்த, பீகார் மாநிலத்தை சேர்ந்த 160-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
பரமத்திவேலூர்,
பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தங்கி தேங்காய் கிடங்கு, கோழிப்பண்ணை, இரும்பு ஆலைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 160-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வந்தனர். இவர்கள் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர்.
இந்த நிலையில் பீகார் மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து அந்தந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் கணக்கெடுப்பு பணிகளை மேற்கொண்டனர். அதன்படி பரமத்தி வேலூர் தாலுகாவில் தங்கி வேலை பார்த்து வந்த 160-க்கும் மேற்பட்ட பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களை வருவாய்த்துறையினர் கணக்கெடுத்து, பரமத்தி அருகே உள்ள தனியார் கல்லூரியில் தங்க வைத்து உணவுகள் வழங்கினர்.
முழுமையான கணக்கெடுக்கும் பணிக்கு பின்னர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு ரெயிலில் அனுப்பி வைப்பதற்காக தனியார் பள்ளி மற்றும் கல்லூரி பஸ்களில் சமூக இடைவெளியுடன் நாமக்கல் ரெயில் நிலையத்திற்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்தனர். இதையடுத்து தொழிலாளர்களுக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்ட பொருட்களை வழங்கி பரமத்தி வேலூர் தாசில்தார் சுந்தரவள்ளி, பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமி, வருவாய்த்துறையினர் நாமக்கல் ரெயில் நிலையத்திற்கு போலீஸ் பாதுகாப்புடன் பஸ்களில் அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து அவர்கள் நாமக்கல் ரெயில் நிலையம் அழைத்து வரப்பட்டனர். இங்கிருந்து 24 பெட்டிகள் கொண்ட சிறப்பு ரெயிலில் பீகார் மாநில தொழிலாளர்கள் உள்பட மொத்தம் 1,464 பேரை மாவட்ட கலெக்டர் மெகராஜ், போலீஸ் சூப்பிரண்டு அருளரசு ஆகியோர் உணவு பொருட்கள் வழங்கி வழியனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story