தனியார் நிதி நிறுவனங்கள் கடன் தொகையை செலுத்த நெருக்கடி; மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் புகார்


தனியார் நிதி நிறுவனங்கள் கடன் தொகையை செலுத்த நெருக்கடி; மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் புகார்
x
தினத்தந்தி 22 May 2020 1:51 AM GMT (Updated: 22 May 2020 1:51 AM GMT)

திருச்செங்கோடு அருகே தனியார் நிதி நிறுவனங்கள் கடன் தொகையை செலுத்த நெருக்கடி தருவதாக மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் புகார் தெரிவித்தனர்.

எலச்சிபாளையம், 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த கோழிக்கால் நத்தம், ஆணைக்கல்மேடு, சண்முகபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுவில் சுமார் 250-க்கும் மேற்பட்ட பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனங்களில் தொழில் செய்ய மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெயரில் கடன் பெற்றுள்ளனர்.

கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கும் முன்பு வரை தவணைத்தொகையை சரியாக செலுத்தி வந்துள்ளனர். ஊரடங்கு உத்தரவால் வேலையில்லாமல் அரசும், தனியார் தொண்டு நிறுவனங்கள் தரும் உதவிகளை பெற்று மகளிர் குழு பெண்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கடன் தவணை தொகையை கட்ட வலியுறுத்துவதாகவும், கட்டவில்லை என்றால் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு முடக்கப்படும், கடன் கணக்கில் பிளாக் மார்க் செய்யப்படும் என மிரட்டுவதாகவும் தனியார் நிதி நிறுவனங்கள் மீது கடன் பெற்ற மகளிர் சுயஉதவிக்குழு பெண்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

கோரிக்கை மனு

இந்த நிலையில் மகளிர் சுயஉதவிக்குழு பெண்கள் கோழிக்கால் நத்தம் கிராமத்தில் உள்ள கோவிலில் நேற்று கூடினர். அங்கு முக கவசம் அணிந்து சமூக இடைவெளி விட்டு தங்களின் கோரிக்கை குறித்து ஆலோசித்தனர். அதன்முடிவில் அவர்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் மணி ராஜ், திருச்செங்கோடு தொகுதி எம்.எல்.ஏ. பொன் சரஸ்வதி ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பினர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

மகளிர் சுயஉதவிக்குழு நடத்தி வரும் நாங்கள் வேலையின்றி, வருமானமின்றி தவிக்கும் கொரோனா ஊரடங்கு காலம் முடியும் வரை 6 மாத கடன் தொகையை செலுத்த தனியார் நிதி நிறுவனங்களிடம் கால அவகாசம் தரவேண்டும் என்று கேட்டோம். அதற்கு அவர்கள் காலஅவகாசம் தர மறுப்பதோடு பல்வேறு வகையில் மிரட்டல் விடுக்கிறார்கள். நாங்கள் கடனை தள்ளுபடி செய்ய சொல்லவில்லை. தறிப்பட்டறைகள் கடந்த 50 நாட்களாக இயங்கவில்லை. தளர்வுக்கு பின் வாரத்தில் 3 நாள்தான் வேலை என்ற நிலை உள்ளது. வாழ்க்கையை நகர்த்தவே போராட்டம் என்ற நிலையில் வாழ்வா? சாவா? என வாழ்ந்து வருகிறோம்.

எங்களுக்கு வேலைகிடைத்து இயல்பு நிலை திரும்பும் வரை சுமார் 6 மாத காலத்திற்கு தவணை கட்ட அவகாசம் தரத்தான் கோரிக்கை வைக்கிறோம். ஆனாலும் தொடர்ந்து நிதி நிறுவனத்தினர் தொல்லை கொடுத்து வருகின்றனர். இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு சுய உதவிக்குழுவினருக்கு கடன் தொகையை செலுத்த அவகாசம் பெற்று தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

Next Story