வாரத்தில் 6 நாட்கள் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் மீன் தொழிலாளர்கள் மனு


வாரத்தில் 6 நாட்கள் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் மீன் தொழிலாளர்கள் மனு
x
தினத்தந்தி 22 May 2020 7:24 AM IST (Updated: 22 May 2020 7:24 AM IST)
t-max-icont-min-icon

வாரத்தில் 6 நாட்கள் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மீன் தொழிலாளர்கள் மனு கொடுத்தனர்.

நாகர்கோவில், 

வாரத்தில் 6 நாட்கள் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மீன் தொழிலாளர்கள் மனு கொடுத்தனர்.

மீன்பிடிக்க அனுமதி

குமரி மாவட்ட மீன் தொழிலாளர்கள் சங்க (சி.ஐ.டி.யு) மாவட்ட தலைவர் அலெக்சாண்டர், பொதுச்செயலாளர் அந்தோணி, நிர்வாகிகள் ஜார்ஜ், எட்வின், ஆல்வின், ஆன்றனி உள்பட பலர் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

குமரி மாவட்டத்தில் 48 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு 4 மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் சில தூண்டில் வளைவுகளும் இருக்கின்றன. மீனவ கிராமங்களையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாத்திட மீனவ அமைப்புகளின் வற்புறுத்தலுக்கு பின்பு பல மீனவ கிராமங்களிலும் தூண்டில் வளைவுகள், கடலரிப்பு தடுப்புச் சுவர்கள் அமைக்க அறிவிக்கப்பட்ட நிதியை பயன்படுத்தி போர்க்கால அடிப்படையில் தூண்டில் வளைவுகள், தடுப்பு சுவர்கள் தரமாக கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

6 நாட்கள்

மேலும் கொரோனா பரவல் காரணமாக வாரத்தில் 2 நாட்கள் மட்டும் நிபந்தனைகளுடன் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டது. மேலும் சில ஊர்களுக்கு 4 நாட்கள் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவைகளை மாற்றி தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் சமூக இடைவெளியை கடைபிடித்தும்,

மீனவர்களின் பொருளாதார சூழ்நிலையை சீர்செய்திடவும், வறுமை, பசி, பட்டினியில் இருந்து பாதுகாத்திடவும் வாரத்தில் 6 நாட்கள் மீன்பிடி தொழில் செய்திட அனுமதி வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஒலி-ஒளி அமைப்பாளர்கள்

தென்குமரி ஒலி, ஒளி உரிமையாளர்கள் மற்றும் அமைப்பாளர்கள் நலச்சங்க மாவட்ட தலைவர் ஸ்மைல்தாஸ் தலைமையில் நிர்வாகிகள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-எங்களது நலச்சங்கத்தில் மட்டும் ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். தற்போது கொரோனா நோய்த்தொற்று காரணமாக மத்திய, மாநில அரசு அறிவித்துள்ள ஊரடங்கு காரணமாக கோவில் திருவிழாக்கள், திருமண நிகழ்ச்சிகள் மற்றும் அரசு நிகழ்ச்சிகள், ஏனைய பொது நிகழ்ச்சிகளும் ரத்து செய்தபடியால் ஒலி, ஒளி அமைப்பு தொழிலாளர்கள் அனைவரும் வாழ்வாதாரமின்றி உள்ளனர்.

ரூ.10 ஆயிரம் நிவாரணம்

தற்போது இந்த ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையிலும் கோவில் விழாக்களுக்கோ, திருமண நிகழ்ச்சிகளுக்கோ அனுமதி இல்லாதபடியால் தொழில் செய்ய முடியாத நிலையில் உள்ளோம். எனவே கொரோனா கால நிவாரணமாக தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story