சலூன்கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு பதிவேடு அவசியம் போலீஸ் சூப்பிரண்டு அறிவிப்பு


சலூன்கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு பதிவேடு அவசியம்  போலீஸ் சூப்பிரண்டு அறிவிப்பு
x
தினத்தந்தி 22 May 2020 7:27 AM IST (Updated: 22 May 2020 7:27 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் சலூன்கடைகளில் வாடிக்கையாளர் பதிவேட்டை அவசியம் பராமரிக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு அறிவித்துள்ளார்.

திண்டுக்கல், 

தமிழகத்தில் ஊரடங்கால் 1½ மாதங்களாக சலூன்கடைகள் பூட்டி கிடந்தன. இதற்கிடையே மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளை தவிர இதர பகுதிகளில் சலூன்கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கிராமங்களில் சலூன் கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. இதற்கிடையே சலூன் கடைகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் கூறியதாவது:-

சலூன் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். மேலும் கொரோனா தொற்று ஏற்படாமல் தவிர்க்க, சொந்தமாக துண்டு கொண்டு வரவேண்டும். அதேபோல் முடிதிருத்தம் செய்பவர்கள் கையுறை மற்றும் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும். சலூன் கடைகளில் தினமும் 5 முறை கிருமிநாசினி மருந்து தெளிக்க வேண்டும். அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும்.

மேலும் ஒருவருக்கு முடி திருத்தம் செய்து முடித்ததும் உபகரணங்களை கிருமிநாசினி மருந்தால் கண்டிப்பாக சுத்தம் செய்ய வேண்டும். இதுதவிர வாடிக்கையாளர்களை எளிதில் கண்டுபிடிக்கும் வகையில், ஒவ்வொரு சலூன் கடையிலும் பதிவேடு அவசியம் பராமரிக்க வேண்டும். இந்த விதிகளை கடைபிடிக்க தவறினால் சம்பந்தப்பட்ட கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story