கல்லூரி மாணவர்கள் உள்பட 1,464 பேர் பீகாருக்கு அனுப்பி வைப்பு
நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் இருந்து கல்லூரி மாணவர்கள் உள்பட 1,464 பேர் நேற்று சிறப்பு ரெயிலில் பீகாருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
நாமக்கல்,
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இதையொட்டி அனைத்து வகையான தொழிலாளர்களும் வேலையிழந்து உள்ளனர். இந்த நிலையில் மத்திய அரசு சொந்த மாநிலங்களுக்கு செல்ல விரும்பும் தொழிலாளர்களை அனுப்பி வைக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டு உள்ளது.
அதன்படி நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பணியாற்றி வந்த பீகார் மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல விருப்பம் தெரிவித்தனர். இதேபோல் 137 கல்லூரி மாணவர்களும் பீகாருக்கு செல்ல விண்ணப்பம் செய்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் சொந்த ஊருக்கு திரும்ப சிறப்பு ரெயில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதையொட்டி அவர்கள் 5 திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். அவர்களுக்கு அங்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பஸ் மூலம் நாமக்கல் ரெயில் நிலையம் அழைத்து வரப்பட்டனர். இங்கிருந்து 24 பெட்டிகள் கொண்ட சிறப்பு ரெயிலில் கல்லூரி மாணவர்கள் உள்பட மொத்தம் 1,464 பேரை மாவட்ட கலெக்டர் மெகராஜ், போலீஸ் சூப்பிரண்டு அருளரசு ஆகியோர் உணவு பொருட்கள் வழங்கி வழியனுப்பி வைத்தனர்.
பின்னர் மாவட்ட கலெக்டர் மெகராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவுபடி நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் என மொத்தம் 1,464 பேர் பீகாருக்கு சிறப்பு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். இதற்கான செலவை தமிழக அரசு ஏற்கும். அவர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. உணவு, குடிநீர் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே 600 வடமாநில தொழிலாளர்கள் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து சொந்த மாநிலங்களுக்கு திரும்பி உள்ளனர்.
மேலும் 1,300 பேர் பீகார், ஒடிசா, மத்திய பிரதேசம், மராட்டியம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு செல்ல விருப்பம் தெரிவித்து உள்ளனர். அவர்கள் இன்னும் ஓரிரு வாரத்தில் அனுப்பி வைக்கப்படுவார்கள். அவர்களுக்கு தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. இதேபோல் வெளிமாநிலங்களில் இருந்து சுமார் 1,000 பேர் நாமக்கல் மாவட்டத்திற்கு இதுவரை வந்து உள்ளனர். இன்னும் 500 பேர் வருகை தருவதற்காக விருப்பம் தெரிவித்து உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது ரெயில்வே கோட்ட முதுநிலை இயக்க மேலாளர் ஹரிகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, உதவி கலெக்டர்கள் கோட்டைகுமார், மணிராஜ், தாசில்தார் பச்சைமுத்து மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story