முறைகேடாக மது விற்பனை: டாஸ்மாக் ஊழியர்கள் 10 பேர் பணி இடைநீக்கம்


முறைகேடாக மது விற்பனை: டாஸ்மாக் ஊழியர்கள் 10 பேர் பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 22 May 2020 3:04 AM GMT (Updated: 22 May 2020 3:04 AM GMT)

சேலத்தில் முறைகேடாக மது விற்பனை செய்ததாக எழுந்த புகாரில் டாஸ்மாக் ஊழியர்கள் 10 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

சேலம், 

கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. அதேசமயம் மதுபாட்டில்கள் திருட்டு போகாமல் இருப்பதற்காக கடைகளிலிருந்து குடோன்களுக்கு மதுபாட்டில்கள் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டன. இதனிடையே கடந்த 7-ந் தேதி மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன.

அப்போது மது பிரியர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். அதேசமயம் மதுபானங்களை முறைகேடாக விற்பனை செய்தாலோ அல்லது கூடுதல் விலைக்கு விற்றாலோ? டாஸ்மாக் ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை செய்யப்பட்டு இருந்தது.

இதைத்தொடர்ந்து மதுக்கடைகளையும், மதுபான விற்பனையையும் டாஸ்மாக் அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் சேலம் கந்தம்பட்டி குடோனில் இருந்து மதுபாட்டில்களை ஊழியர்கள் அருகிலுள்ள வெள்ளக்கல்பட்டி மதுக்கடைக்கு கடந்த 6-ந் தேதி இரவு கொண்டு சென்றனர். அப்போது சாமிநாயக்கன்பட்டியை சேர்ந்த அய்யப்பன் என்பவருக்கு டாஸ்மாக் ஊழியர்கள் முறைகேடாக மதுபாட்டில்களை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக கருப்பூர்போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யப்பனை கைது செய்தனர். இந்த விவகாரத்தில் தொடர்புடைய வெள்ளக்கல்பட்டி டாஸ்மாக் கடையின் கூடுதல் மேற்பார்வையாளர் தளவாய்பட்டியை சேர்ந்த சண்முகசுந்தரம், விற்பனையாளர்கள் பெருமாள், கண்ணன் உள்பட 10 பேரை பணி இடைநீக்கம் செய்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் வேடியப்பன் உத்தரவிட்டுள்ளார்.

அதாவது கடந்த 7-ந் தேதி டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பாக குடோனில் இருந்து வெள்ளக்கல்பட்டி டாஸ்மாக் கடைக்கு மது பானங்கள் கொண்டு சென்றபோது சிலருக்கு வழியில், முறைகேடாக விற்பனை செய்ததால் டாஸ்மாக் ஊழியர்கள் 10 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story