கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு பகுதிகளில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட முடியாமல் பெற்றோர் தவிப்பு


கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு பகுதிகளில்  குழந்தைகளுக்கு தடுப்பூசி போட முடியாமல் பெற்றோர் தவிப்பு
x
தினத்தந்தி 22 May 2020 3:06 AM GMT (Updated: 22 May 2020 3:06 AM GMT)

தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு பகுதிகளில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட முடியாமல் பெற்றோர் பரிதவித்து வருகின்றனர்.

தேனி,

தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன. பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள் அமைந்துள்ள தெருக்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு வெளியாட்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதனால், கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களுக்கான அத்தியாவசிய பொருட்களை பெறுவதற்கு அவதி அடைந்து வருகின்றனர். அதுபோல், கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் கர்ப்பிணிகள் மருத்துவ பரிசோதனைக்கு செல்ல முடியாமல் பரிதவித்து வருகின்றனர். அவர்களை வீடு தேடிச் சென்று மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்க சுகாதாரத்துறையினர் முன்வர வேண்டும்.

தடுப்பூசி

அதுபோல், கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணியும் பாதிக்கப்பட்டு உள்ளது. குழந்தைகள் பிறந்த 3-வது மாதத்தில் தடுப்பூசி போட வேண்டும். ஆனால், சின்னமனூர், உத்தமபாளையம், ஜெயமங்கலம் உள்ளிட்ட நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட முடியாமல் பெற்றோர்கள் தவித்து வருகின்றனர்.

எனவே, நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள குழந்தைகள், கர்ப்பிணிகள் குறித்து முழுமையாக கணக்கெடுப்பு நடத்தி அவர்களுக்கு வீடு தேடிச் சென்று தடுப்பூசி போடவும், கர்ப்பிணிகளுக்கான பரிசோதனைகள் நடத்தி, மருத்துவ ஆலோசனைகள் வழங்கவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story