ஆண்டிப்பட்டி அருகே அனுமதியின்றி வைக்கப்பட்ட முத்தரையர் சிலை அகற்றம் தர்ணா போராட்டத்தில் பெண்கள் ஈடுபட்டதால் பரபரப்பு
ஆண்டிப்பட்டி அருகே அனுமதியின்றி வைக்கப்பட்ட முத்தரையர் சிலை அகற்றப்பட்டதால் பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கண்டமனூர்,
ஆண்டிப்பட்டி அருகே மரிக்குண்டு ஊராட்சியில் எரதிமக்காள்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தம் அருகில் ஒரு சமுதாய மக்கள் நேற்று மன்னர் பெரும்பிடுகு முத்தரையர் சிலையை வைத்து வழிபாடு செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆண்டிப்பட்டி வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் அங்கு வந்தனர். அனுமதியின்றி சிலை வைக்கப்பட்டுள்ளதால் அதை அதிகாரிகள் அகற்ற முயன்றனர். ஆனால், சிலையை அகற்றக்கூடாது என்று சிலையை சுற்றிலும் பெண்கள் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். அவர்களிடம் ஆண்டிப்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன் பேச்சுவார்த்தை நடத்தினார். மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்று சிலை வைக்க வேண்டும் என்றும், தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் சிலையை வைக்க அனுமதிக்க முடியாது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அந்த சிலை அகற்றப்பட்டது. அகற்றப்பட்ட சிலை அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைக்கப்பட்டது. பின்னர் பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மீண்டும் சிலையை நிறுவாமல் தடுக்கும் வகையில் அந்த கிராமத்தில் போலீசார் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story