திருச்சி மாவட்டத்தில் ரூ.45 கோடி மானியத்தில் நுண்ணீர் பாசன திட்டம் கலெக்டர் தகவல்


திருச்சி மாவட்டத்தில் ரூ.45 கோடி மானியத்தில் நுண்ணீர் பாசன திட்டம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 22 May 2020 9:51 AM IST (Updated: 22 May 2020 9:51 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்டத்தில் ரூ.45 கோடி மானியத்தில் நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்று கலெக்டர் சிவராசு கூறி உள்ளார்.

திருச்சி, 

திருச்சி மாவட்டத்தில் ரூ.45 கோடி மானியத்தில் நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்று கலெக்டர் சிவராசு கூறி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நுண்ணீர் பாசன திட்டம்

திருச்சி மாவட்டத்தில் 2020-21-ம் நிதியாண்டில் 6,500 எக்டேர் பரப்பளவிற்கு ரூ.45 கோடி மானியத்தில் நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தோட்டக்கலை பயிர்களான வாழை, வெற்றிலை, வெங்காயம், மரவள்ளி, மா, கத்தரி, மிளகாய், பூக்கள் போன்றவற்றின் உற்பத்தியை சார்ந்தே பொருளாதாரம் உள்ளது.

நீராதாரம் மறறும் மழைப்பொழிவு நாளுக்கு நாள் குறைந்து வருவதால் இருக்கும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக பரப்பளவில் பயிர் சாகுபடி செய்யும் நோக்கில் இந்த திட்டத்தின் மூலம் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் சொட்டுநீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் அமைத்து தர வகை செய்யப்பட்டுள்ளது. சிறு, குறு விவசாயிகள் அதிகபட்சமாக 2 எக்டேர் வரையிலும், பெரிய விவசாயிகள் 12.5 எக்டேர் அளவிலும் பயன்பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், பாரத பிரதமரின் நுண்ணீர் பாசனத்திட்டத்தின் கீழ் துணை நீர் மேலாண்மை செயல்திட்டம் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. நுண்ணீர் பாசன திட்டத்துக்கு பதிவு செய்யும் விவசாயிகள் பாசன நீரை கொண்டு செல்வதற்கு ஏதுவாக ஒரு எக்டேருக்கு பிவிசி குழாய்கள் ரூ.10 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது. டீசல் மோட்டார் அல்லது மின்மோட்டார் பொருத்த ரூ.15 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது. தரைமட்ட நீர்சேகரிப்பு தொட்டி கட்ட ஒரு கன மீட்டருக்கு ரூ.350 வீதம் 114 கனமீட்டர் அளவுக்கு (அதிகபட்சமாக ரூ.40ஆயிரம்) மானியம் வழங்கப்படுகிறது. விவசாய நிலத்தில் ஆழ்துளை கிணறு அங்கீகாரம் செய்யப்பட்ட கிராமங்களில் அமைக்க ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.

தோட்டக்கலை பயிர்கள்

இந்த திட்டத்தில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் தாங்கள் பயிரிடும் தோட்டக்கலை பயிர்களை அடங்கலில் பதிவு செய்வதுடன், ஆதார் அட்டை நகல், நில வரைபடம், கணினி சிட்டா, சிறு, குறு விவசாயிகளாக இருப்பின் இதற்கான சான்றுடன் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு இணையதளம் மூலம் பதிவுகள் செய்து, தங்களுக்கு விருப்பமுள்ள அரசு அங்கீகாரம் செய்யப்பட்ட சொட்டுநீர் பாசன நிறுவனங்கள் மூலமாக பயன்அடையலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

Next Story