திருவெண்ணெய்நல்லூரில் மழை: விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதம்
திருவெண்ணெய்நல்லூரில் பெய்த மழையால் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் தண்ணீரில் நனைந்து சேதமடைந்தன.
அரசூர்,
திருவெண்ணெய்நல்லூரில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் உள்ளது. இங்கு போதுமான இடவசதி இல்லாததால் குறுகிய இடத்தில் பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது.
இந்த ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு திருவெண்ணெய்நல்லூர், ஏமப்பூர், ஏனாதிமங்கலம், அரசூர், பெரியசெவலை, சித்தலிங்கமடம், மடப்பட்டு ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளையும் விவசாய விளைபொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். ஆனால் இந்த ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் போதுமான இடவசதி இல்லாததால் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகள் தெருக்களிலும், சாலையோரங்களிலும் அடுக்கி வைத்து விற்பனை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கொண்டு வந்த 200-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் சாலையோரங்களில் ஆங்காங்கே அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. மாலையில் திடீரென பெய்த மழையின் காரணமாக நெல் மூட்டைகள், தண்ணீரில் நனைந்து சேதமடைந்தன.
இதனால் நெல் மூட்டைகளுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் நஷ்டமடைந்து கவலையுடன் வீடு திரும்பினார்கள். போதுமான இடவசதி இல்லாத காரணத்தால் மழை பெய்யும்போது இதுபோன்று நெல் மூட்டைகள் நனைந்து வீணாவது தொடர் கதையாக நடந்து வருகிறது. எனவே அனைத்து வசதிகளுடன் கூடிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை அமைத்துத்தர வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story