விழுப்புரத்தில் ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் தீவிரம்
விழுப்புரத்தில் ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விழுப்புரம்,
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கினால் பயணிகள் ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. சரக்கு ரெயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தங்கியிருந்து வேலை பார்த்து வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவரவர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கவும், அதுபோல் இந்தியாவின் பல்வேறு வெளிமாநிலங்களில் சிக்கி தவிக்கும் தமிழர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கவும் கடந்த சில வாரமாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
மேலும் அடுத்த மாதம் (ஜூன்) 1-ந் தேதி முதல் குளிர்சாதன வசதி இல்லாத 200 ரெயில்களை இயக்க இந்திய ரெயில்வே முடிவு செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்திலும் படிப்படியாக பயணிகள் ரெயில் சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி ரெயில் நிலையங்களை தயார்படுத்தும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக விழுப்புரம் ரெயில் நிலைய பகுதியில் உள்ள தண்டவாளங்களை பராமரிக்கும் பணியில் தற்போது ரெயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தண்டவாளத்தின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் பழைய ஜல்லிக்கற்கள், மண் ஆகியவற்றை அகற்றிவிட்டு புதியதாக ஜல்லிக்கற்கள், மண் ஆகியவற்றை கொட்டினர். மேலும் தண்டவாளங்களில் ஆயில் மற்றும் கிரீஸ் பூசும் பணிகளையும் மேற்கொண்டனர்.
Related Tags :
Next Story