அருப்புக்கோட்டை அருகே வேளாண் துறை பெண் ஊழியர் தற்கொலை பணிச்சுமை காரணமா? போலீசார் விசாரணை


அருப்புக்கோட்டை அருகே  வேளாண் துறை பெண் ஊழியர் தற்கொலை  பணிச்சுமை காரணமா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 22 May 2020 10:30 AM IST (Updated: 22 May 2020 10:30 AM IST)
t-max-icont-min-icon

அருப்புக்கோட்டை அருகே வேளாண்துறை பெண் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். பணிச்சுமை காரணமாக அவர் இந்த விபரீத முடிவை தேடிக்கொண்டாரா? என்பது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அருப்புக்கோட்டை,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மதிராணி. இவர் ரெட்டியப்பட்டி வேளாண் அலுவலகத்தில் உதவி அலுவலராக பணி புரிந்து வந்தார்.

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அருண்குமாருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். அருண்குமார் ஆந்திர மாநிலத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இதனால் மதிராணி தனது மாமனார், மாமியாருடன் புளியம்பட்டியில் வசித்தார்.

சம்பவத்தன்று ஆந்திராவில் இருந்து அருண்குமார், தனது மனைவி மதிராணி செல்போனுக்கு அழைப்பு விடுத்துள்ளார். வெகுநேரமாகியும் போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்த அருண்குமார், தனது தந்தையை தொடர்பு கொண்டு அதுகுறித்து கேட்டுள்ளார்.

தற்கொலை

இதையடுத்து அருண்குமாரின் தந்தை மதிராணியின் அறைக்கு சென்று பார்த்தபோது அங்கு அவர் கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது.

அந்த அறையில் மதிராணி தூக்கில் பிணமாக தொங்கினார். உடனே இதுகுறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

மேலும் மதிராணியின் உடலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அரசு அலுவலர் மதிராணி பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரித்து வருகின்றனர்.

Next Story