டாஸ்மாக் கடை திறந்த பின்பு பரவலாக நடைபெறும் குற்ற சம்பவங்கள்
மாவட்டத்தில் ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறந்த பின்பு கொலை சம்பவங்கள் உள்ளிட்ட குற்றவியல் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறும் நிலை உள்ளதால் மாவட்ட போலீஸ் நிர்வாகம் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்,
மாவட்டத்தில் கடந்த மார்ச் 24-ந்தேதி ஊரடங்கு அமலுக்கு வந்ததிலிருந்து மாவட்ட போலீஸ் நிர்வாகம், போலீசாரை ஊரடங்கு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியில் ஈடுபடுத்தியது. வாகன போக்குவரத்து ஏதும் இல்லாததால் சாலை விபத்துகளும் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டது. போலீஸ் நிலையங்களில் குற்றவியல் சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் பதிவு செய்ய வேண்டிய அவசியமே ஏற்படவில்லை. மாவட்டம் முழுவதும் முற்றிலுமாக அமைதி நிலவியது.
அதிகரிப்பு
டாஸ்மாக் கடைகள் திறந்த பின்பு குற்றவியல் சம்பவங்கள் பரவலாக நடக்க தொடங்கின. இதில் மாவட்ட மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் திருச்சுழி, சேத்தூர், சாத்தூர், சிவகாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் நடந்தன. இச்சம்பவங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மதுபோதையில் தந்தை மகனை கொன்றதும், மகன் தந்தையை அடித்து கொன்றதுமான தகவல்கள் வெளியாகின. இதுதவிர வீடு புகுந்து கொள்ளை அடிக்கும் சம்பவங்களும் நடக்க தொடங்கியுள்ளன. ஒரே நாளில் விருதுநகர் அருகே 2 வேறு கிராமங்களில் 87 பவுன் நகையும், ரூ.1 லட்சமும் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. இதுதவிர பரவலாக மோதல் சம்பவங்களும், கொலை முயற்சி சம்பவங்களும் நடந்துள்ளது குறித்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கோரிக்கை
எனவே மாவட்ட போலீஸ் நிர்வாகம் டாஸ்மாக் கடைகளுக்கு பாதுகாப்பு தரும் நிலையில், மதுவால் அதிகரித்து வரும் குற்றவியல் சம்பவங்களை தவிர்க்க கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் சாலைகளில் இயங்க தொடங்கியுள்ள நிலையில் விபத்துகளை தவிர்க்கவும் உரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
Related Tags :
Next Story