ஒடிசாவை சேர்ந்த 1,464 தொழிலாளர்கள் ரெயிலில் பயணம்


ஒடிசாவை சேர்ந்த 1,464 தொழிலாளர்கள் ரெயிலில் பயணம்
x
தினத்தந்தி 22 May 2020 5:29 AM GMT (Updated: 22 May 2020 5:29 AM GMT)

ஈரோடு மாவட்டத்தில் வேலை செய்து வந்த ஒடிசாவை சேர்ந்த 1,464 தொழிலாளர்கள் ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஈரோடு, 

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் கடுமையான சிரமங்களை மக்கள் அனுபவித்து வருகிறார்கள். குறிப்பாக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வேலை மற்றும் உணவு இன்றி மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல அந்தந்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

ஈரோடு மாவட்டத்தில் இருந்து வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் பணியாற்றி வந்த சுமார் 6 ஆயிரம் பேர் வந்து உள்ளனர். இதுபோல் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் வேலை செய்து வந்த பிற மாநில மக்களை அவர்களின் சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது.

ஏற்கனவே ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட சில மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் சுமார் 2 ஆயிரம் பேர் வரை சொந்த ஊர்களுக்கு சென்ற நிலையில், நேற்று முன்தினம் உத்தர பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 1,464 பேர் ஒரே ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து நேற்று ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 1,464 தொழிலாளர்கள் ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவர்களுக்கான கொரோனா சிறப்பு ரெயில் நேற்று பிற்பகல் ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வந்தது. பிற்பகல் 3 மணியில் இருந்து தொழிலாளர்கள் ரெயில் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு டோக்கன் மற்றும் ரெயில் டிக்கெட் வழங்கப்பட்டது.

முன்னதாக தொழிலாளர்கள் அவர்கள் தங்கி இருந்த தொழிற்சாலைகள் மற்றும் ஈரோடு மாநகராட்சி திருமண மண்டபத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தனர். அவர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து ரெயில் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட அவர்கள் சோதனைக்கு பின்னர் ரெயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்த பணிகளை ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன், போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்திகணேசன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். தொழிலாளர்களை பெயர் பட்டியல் சரிபார்த்து அனுப்பும் பணிகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டு இருந்தனர்.

ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ, ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ செந்தில்குமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர். ரெயில் நிலையத்தில் வேறு வெளி நபர்கள் யாரும் அனுமதிக்கப் படவில்லை. அனைத்து பகுதிகளிலும் கடுமையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மாலை 6 மணிக்கு ஒடிசா மாநில தொழிலாளர்களுடன் ரெயில் புறப்பட்டது. தொழிலாளர்கள் மகிழ்ச்சியாக புறப்பட்டு சென்றனர். இந்த ரெயில் ஒடிசா மாநிலம் பலாங்கி ரெயில் நிலையத்துக்கு சென்று சேரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story