டாஸ்மாக் கடையில் துளைபோட்டு கொள்ளை முயற்சி; 2 பேர் சிக்கினர்


டாஸ்மாக் கடையில் துளைபோட்டு கொள்ளை முயற்சி; 2 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 22 May 2020 11:11 AM IST (Updated: 22 May 2020 11:11 AM IST)
t-max-icont-min-icon

புவனகிரி அருகே டாஸ்மாக் கடையில் துளைபோட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள், ரோந்து சென்ற போலீஸ்காரரிடம் சிக்கினார்.

புவனகிரி, 

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள குறியாமங்கலம் கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு வடலூரை சேர்ந்த சுந்தரம் பணி மேற்பார்வையாளராகவும், சுத்துகுழி கிராமத்தை சேர்ந்த செல்வகுமார் விற்பனையாளராகவும் உள்ளனர். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு விற்பனையை முடித்த விட்டு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு திரும்பினர்.

இந்த நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு டாஸ்மாக் கடை அமைந்துள்ள வழியாக புவனகிரி போலீஸ் ஏட்டு விவேகானந்தன் ரோந்து சென்றார். அப்போது டாஸ்மாக் கடையில் இருந்து சத்தம் கேட்டதால், அவர் அங்கு சென்று பார்த்தார். அப்போது 2 வாலிபர்கள் டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து அவர், 2 வாலிபர்களையும் கையும் களவுமாக பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றார். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் ஆயிபுரத்தை சேர்ந்த லட்சுமிகாந்தன் மகன் முத்து(வயது 22), ராதாகிருஷ்ணன் மகன் மதியழகன்(23) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி அறிந்ததும் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், புவனகிரி போலீஸ் நிலையத்துக்கு வந்து, கொள்ளை முயற்சியை தடுத்து நிறுத்திய போலீஸ் ஏட்டு விவேகானந்தனை வெகுவாக பாராட்டி வெகுமதி வழங்கினார்.

Next Story