அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரண உதவி; இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி மூலம் வழங்கப்பட்டது


அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரண உதவி; இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி மூலம் வழங்கப்பட்டது
x
தினத்தந்தி 22 May 2020 6:39 AM GMT (Updated: 22 May 2020 6:39 AM GMT)

கடலூரில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரண உதவி இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி மூலம் வழங்கப்பட்டது

கடலூர்,

கொரோனா பரவுவதை தடுக்க போடப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி அமைப்பு சாரா நல வாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் அவர்களின் வங்கி கணக்கில் ரூ.2 ஆயிரம் செலுத்த தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி வங்கி கணக்கு விவரம் இல்லாத அமைப்பு சாரா நல வாரிய தொழிலாளர்களுக்கு இந்திய தபால் துறையின் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் ஜீரோ பேலன்ஸ் கணக்கு தொடங்கி அதன் மூலம் நிவாரண உதவி வழங்கப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்ட தொழிலாளர் நல அலுவலகத்தில் இருந்து வங்கி கணக்கு விவரம் இல்லாத 28 ஆயிரத்து 646 அமைப்பு சாரா நல வாரிய தொழிலாளர்களின் பட்டியல் அனுப்பப்பட்டு அவர்களுக்கு இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் கணக்கு தொடங்கி விவரம் அனுப்புமாறு கேட்கப்பட்டது. இதன்படி கடலூர் கோட்டத்தை சேர்ந்த 20 ஆயிரத்து 956 தொழிலாளர்களுக்கு கடந்த 10 நாட்களாக அந்தந்த பகுதி தபால்காரர்கள் மற்றும் கிராம தபால் ஊழியர்கள் மூலம் அவரவர் வீடுகளுக்கே சென்று, எவ்வித கட்டணமின்றி கணக்கு தொடங்கப்பட்டு வருகிறது.

19-ந்தேதி வரை கடலூர் கோட்டத்தில் 15 ஆயிரம் கணக்குகள் தொடங்கப்பட்டது. இது வரை கணக்கு தொடங்கியவர்களில் 164 பேருக்கு அவரவர் தபால் வங்கி கணக்கில் ரூ.2 ஆயிரம் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதில் கடலூர் பகுதியை சேர்ந்த 5 பேருக்கு நேற்று ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது.

இதை கடலூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் குணசேகரன் வழங்கினார். இதில் உதவி கண்காணிப்பாளர் அப்துல்லத்தீப், தலைமை தபால் அதிகாரி கோவிந்தராஜன், இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி கடலூர் கிளை முதுநிலை மேலாளர் சுகுமார், விற்பனை மேலாளர் கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இது பற்றி தபால் கோட்ட கண்காணிப்பாளர் குணசேகரன் கூறுகையில், வங்கி கணக்கு தொடங்கப்பட்ட 164 பேருக்கு ரூ.2 ஆயிரம் நிதி வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு வங்கி கணக்கு தொடங்கப்பட்டு வருகிறது. ஆகவே அமைப்பு சாரா நல வாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்கள் தங்களது ஆதார் அட்டை, நல வாரிய அடையாள அட்டை மற்றும் செல்போன் எண்களுடன் அருகில் உள்ள தபால் நிலையங்களுக்கு சென்று, பட்டியலில் தங்களின் பெயர் இருந்தால் உடனடியாக கணக்கு தொடங்கி, நிவாரண நிதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

Next Story