தூத்துக்குடி துப்பாக்கி சூடு 2-ம் ஆண்டு நினைவு தினம்: பலியானவர்கள் உருவப்படத்துக்கு அரசியல் கட்சியினர் அஞ்சலி
தூத்துக்குடி துப்பாக்கி சூடு 2-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, பலியானவர்களுக்கு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது நடந்த கலவரத்தால் போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தின் 2-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருப்பதால் பொது அஞ்சலி நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்களின் வீடுகளில் உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். கல்லறைகளிலும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.
அதே போன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடந்த அ.குமரெட்டியபுரம், பண்டாரம்பட்டி, தெற்குவீரபாண்டியபுரம், மடத்தூர், மீளவிட்டான், திரேஸ்புரம், மினிசகாயபுரம், பாத்திமாநகர் உள்ளிட்ட இடங்களில் உயிர் இழந்தவர்களின் உருவப்படங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும் அந்தந்த பகுதியில் அரசியல் கட்சியினரும் அஞ்சலி செலுத்தினர்.
ஸ்டெர்லைட் எதிர்ப்புக்குழுவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, பாத்திமாபாபு உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். அப்போது, சமூக இடைவெளியை கடைபிடித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் பங்கேற்றவர்கள் கறுப்பு ஆடை மற்றும் கறுப்பு நிற முகக்கவசம் அணிந்து இருந்தனர். பண்டாரம்பட்டி பகுதியில் வீடுகளின் முன்பு கோலங்கள் வரைந்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் திறந்த வெளியில் பொது அஞ்சலி கூட்டம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. மேலும் கல்லறைகளுக்கு அஞ்சலி செலுத்த சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி ஆதார் எண்களை கேட்டு வாங்கிய பிறகே அனுமதித்தனர். துப்பாக்கி சூடு நினைவு தினத்தையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்பாலகோபாலன் தலைமையில் சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கலைஞர் அரங்கில் துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட செயலாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ தலைமை தாங்கி அலங்கரிக்கப்பட்ட படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் அர்ச்சுணன் தலைமையில் கட்சியினர் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் உருவப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்ட அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் சந்தணசேகர் தலைமை தாங்கினார். வெனி இளங்குமரன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநகர செயலாளர் ஞானசேகர், ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாந்தன், தமிழர் விடியல் கட்சி மாவட்ட செயலாளர் சந்தனராஜ், இந்திய வக்கீல்கள் சங்க மாவட்ட அமைப்பாளர் ராமச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி கிளை செயலாளர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
தூத்துக்குடியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநில அமைப்பு செயலாளர் ஹென்றிதாமஸ் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் இறந்தவர்களின் உருவப்படங்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story