பஸ், ரெயில், ஆட்டோக்கள் ஓடாது கர்நாடகத்தில் நாளை முழு ஊரடங்கு


பஸ், ரெயில், ஆட்டோக்கள் ஓடாது கர்நாடகத்தில் நாளை முழு ஊரடங்கு
x
தினத்தந்தி 23 May 2020 4:45 AM IST (Updated: 23 May 2020 2:35 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் நாளை(ஞாயிற்றுக் கிழமை) முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் நாளை(ஞாயிற்றுக் கிழமை) முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படு கிறது. இதனால் பால், மருந்தகம் தவிர அனைத்து கடைகளும் மூடப்படுகிறது. மேலும் பஸ், ரெயில், ஆட்டோக் கள் ஓடாது.

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தடுப்பு நடவடிக்கையாக வருகிற 31-ந் தேதி வரை நாடு முழுவதும் 4-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. கர்நாடகத்தில் 4-ம் கட்ட ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் பஸ், வாடகை கார், ஆட்டோக்கள் வழக்கம் போல இயக்கப்பட்டு வருகிறது. நேற்று முதல் கர்நாடகத்தில் ரெயில் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் மற்றும் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. வணிகவளாகங்கள், தியேட்டர்கள், கோவில்கள், மசூதிகள், கிறிஸ்துவ தேவாலயங்கள் திறக்க அரசு தடை விதித்துள்ளது.

வருகிற 31-ந் தேதி வரை காலை 7 மணியில் இருந்து இரவு 7 மணிவரை கடைகள், நிறுவனங்கள் திறக்கவும், பஸ்கள், ஆட்டோக்கள் இயக்கவும் மாநிலத்தில் ஊரடங்கில் அரசு தளர்வு செய்துள்ளது. ஆனால் வருகிற 31-ந்தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார். அதன்படி ஞாயிற்றுக்கிழமையான நாளையும், 31-ந் தேதியும் கர்நாடகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.

இதனால் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கர்நாடகத்தில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் காரணமாக பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் நாளை அரசு பஸ்கள் ஓடாது. அதுபோல் ஆட்டோக்கள், வாடகை கார்கள், தனியார் பஸ்களும் இயக்க அனுமதி கிடையாது. அதனால் வெளியூருக்கு செல்ல விரும்புபவர்கள் இன்று(சனிக்கிழமை) சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்லலாம். அத்துடன் ரெயில் சேவையும் ரத்து செய்யப்படுகிறது.

அதே நேரத்தில் பால், மருந்துகடைகள், தனியார் மருத்துவமனைகள் திறந்திருப்பதுடன், அத்தியாவசிய பொருட்கள் எந்த விதமான பிரச்சினையும் இன்றி பொதுமக்களுக்கு கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக மதுக்கடைகள், சலூன் கடைகள் உள்ளிட்ட எந்த கடைகளையும் நாளை திறக்க அனுமதி கிடையாது. அதுபோல் இறைச்சி கடைகள், காய்கறிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

பெங்களூருவில் தற்போது பூங்காக்கள் திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாளை பூங்காக்களும் திறந்திருக்காது. பெங்களூருவில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு தடை விதித்து போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதாவது கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முதற்கட்டமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு போன்று, அனைத்து விதிகளும் பெங்களூருவில் நாளை அமலில் இருக்கும் என்று போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார். மேலும் பெங்களூருவில் இன்று(சனிக்கிழமை) இரவு 7 மணியில் இருந்தே முழு ஊரடங்கு அமலுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் நாளை முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும், ஏற்கனவே திருமணங்கள் செய்ய அனுமதி பெற்றிருந்தால், அதற்கு எந்த விதமான தடையும் இல்லை என்று அரசு அறிவித்துள்ளது. பெங்களூரு உள்பட மாநிலத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், ஞாயிற்றுக்கிழமை முழுமையாக ஊரடங்கு அமல்படுத்துவதன் மூலம் மக்கள் வெளியில் நடமாடுவதை தவிர்க்கவும், கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கத்திலும் இந்த முடிவை அரசு எடுத்துள்ளது.

Next Story