அச்சரப்பாக்கம் அருகே பரிதாபம்: கிணறு தூர்வாரும் போது மண் சரிந்து விழுந்து 2 தொழிலாளர்கள் பலி


அச்சரப்பாக்கம் அருகே பரிதாபம்: கிணறு தூர்வாரும் போது மண் சரிந்து விழுந்து 2 தொழிலாளர்கள் பலி
x
தினத்தந்தி 23 May 2020 4:30 AM IST (Updated: 23 May 2020 3:52 AM IST)
t-max-icont-min-icon

அச்சரப்பாக்கம் அருகே கிணற்றை தூர்வாரும்போது மண் சரிந்து விழுந்து 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அச்சரப்பாக்கம், 

செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், களத்தூர் கிராமத்தில் அருள் என்பவரது விவசாய நிலத்தில் சுமார் 40 அடி ஆழமுள்ள பாசன கிணறு உள்ளது.

வறட்சி காரணமாக விவசாயத்திற்கு போதிய தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் அந்த கிணற்றை மேலும் ஆழப்படுத்தும் பணி கடந்த சில நாட்களாக நடந்தது. களத்தூர் கிராமத்தை சேர்ந்த விஜய் (வயது 24), எழிலரசன் (25), சரவணன் (32), மணி (57) உள்பட 9 பேர் கிணற்றை ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

நேற்று காலையும் தொழிலாளர்கள் கிணற்றை ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கிணற்றுக்குள் 4 பேரும், கிரேன் ஆப்பரேட்டர் உள்பட கிணற்றின் கரையில் 5 பேரும் வேலை செய்தனர்.

கிணற்றுக்குள் இருந்த மண்ணை அள்ளி கிணற்றின் அருகே குவித்து வைத்திருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென அந்த மண் சரிந்து கிணற்றுக்குள் விழுந்தது. இதில் கிணற்றுக்குள் வேலை செய்து கொண்டிருந்த 4 பேரும் மண்ணில் புதைந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற ஊழியர்கள் சத்தம் போட்டனர். உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து கிணற்றுக்குள் இறங்கி மண்ணை அப்புறப்படுத்தி பார்த்தனர்.

அப்போது விஜய், எழிலரசன் ஆகியோர் மண்ணில் புதைந்து பரிதாபமாக இறந்து கிடந்தனர். மேலும் சரவணன், மணி ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தனர். தகவல் அறிந்த அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், ஒரத்தி சப்-இன்ஸ்பெக்டர் எஸ்.மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுராந்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சரவணன், மணி ஆகியோரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story