மாவட்ட செய்திகள்

மாமல்லபுரம் சரக போலீஸ் உள்கோட்டத்தில் 33 மதுக்கடைகள் இன்று திறப்பு + "||" + 33 liquor shops opened at Mamallapuram Police Saraga today

மாமல்லபுரம் சரக போலீஸ் உள்கோட்டத்தில் 33 மதுக்கடைகள் இன்று திறப்பு

மாமல்லபுரம் சரக போலீஸ் உள்கோட்டத்தில் 33 மதுக்கடைகள் இன்று திறப்பு
மாமல்லபுரம் சரக போலீஸ் உள் கோட்டத்தில் உள்ள 33 மதுக்கடைகள் இன்று திறக்கப்பட உள்ளது. சென்னை நபர்கள் வந்தால் அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று மாமல்லபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மாமல்லபுரம், 

மதுக்கடைகளை மூடுமாறு சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு புறநகர் பகுதிகளை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ள மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதி மதுபிரியர்கள் வருவார்கள் என்பதாலும், அவர்களை கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்படும் என்பதுடன், அவர்கள் மூலம் இப்பகுதிகளில் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதாலும் மாமல்லபுரம் போலீஸ் உள்கோட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றம், கல்ப்பாக்கம், திருப்போரூர், மாமல்லபுரம், சட்ராஸ், கேளம்பாக்கம், தாழம்பூர், வடநெம்மேலி, வடகடம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 33 மதுக்கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டாம் என்று மாமல்லபுரம் போலீஸ் உள்கோட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் ஆகியோரிடம் பரிந்துரை செய்தார்.

இதையடுத்து இருவரும் மாமல்லபுரம் சரக போலீஸ் உள்கோட்டத்தில் உள்ள மதுக்கடைகளை திறக்க தடை விதித்தனர். அதன்படி 33 மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம், செய்யூர் பகுதிகளில் திறக்கப்பட்ட 11 மதுக்கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

இதையடுத்து தற்போது இக்கூட்டத்தினை தடுக்கும் வகையில் இன்று (சனிக்கிழமை) முதல் மாமல்லபுரம், வடகடம்பாடி, வடநெம்மேலி, திருக்கழுக்குன்றம், கல்பாக்கம், திருப்போரூர், சட்ராஸ், கேளம்பாக்கம், கொட்டமேடு, தாழம்பூர், மாம்பாக்கம், கண்டிகை, பொன்மார், ஆலத்தூர், கோவளம் ஆகிய பகுதிகளில் உள்ள 33 மதுக்கடைகளை திறக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மாமல்லபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் நிருபர்களிடம் கூறியதாவது:-

மாமல்லபுரம் உள்கோட்டத்தில் இன்று திறக்கப்படும் 33 மதுக்கடைகளுக்கு சென்னை நபர்கள் மது வாங்க வருவதை தடுக்கும் வகையில் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள முட்டுக்காடு, கோவளம், பொன்மார், தையூர், கேளம்பாக்கம், பேரூர், தாழம்பூர் மற்றும் வண்டலூர் ஆகிய பகுதிகளில் போலீஸ் சோதனை சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு, அங்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுவார்கள்.

சென்னையில் இருந்து மது வாங்க வரும் வாகனங்களை பறிமுதல் செய்வதுடன், அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. முக்கிய நிகழ்ச்சிகளுக்காக அனுமதி அட்டை (இ.பாஸ்) பெற்றுள்ளவர்கள் மட்டுமே இப்பகுதிகளில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இன்று திறக்கப்படும் 33 மதுக்கடைகளில் மது வாங்க வரும் நபர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் கையில் குடையை விரித்து வரவேண்டும். சவுக்கு கம்புகளால் அமைக்கப்பட்ட தடுப்புகள் வழியாக வரிசையில் சென்று மது வாங்க அங்கு பணியில் உள்ள போலீசார் மூலம் அறிவுறுத்தப்படுவார்கள்.

ஆதார் அட்டை கொண்டு வரும் நபர்கள் மட்டுமே டோக்கன் முறையில் மது வாங்க அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் வெளிநபர்களுக்கு கண்டிப்பாக மது வாங்க அனுமதி கிடையாது. மது வாங்க வரும் நபர்கள் தங்கள் இரு சக்கர வாகனங்களை மதுக்கடையில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் நிறுத்திவிட்டு வரவேண்டும். மதுக்கடைகள் அருகில் வாகனங்களை நிறுத்தக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

அதேபோல் காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே 13 மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில் ஸ்ரீபெரும்புதூரில் மட்டும் மதுக்கடைகள் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த மது பிரியர்கள் பரிதவித்தனர். மாவட்டத்தின் பிறபகுதிகளில் உள்ள மதுக்கடைகளுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று மது வாங்கி குடித்து வந்தனர்.

இந்தநிலையில் இன்று (சனிக்கிழமை) முதல் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், ஒரகடம் உள்ளிட்ட பகுதியில் உள்ள 11 மதுக்கடைகள் திறக்கப்படும் என அறிப்பு வெளியாகி உள்ளது. இந்த கடைகளில் மதுபானம் வாங்க வருபவர்கள் கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைப்பிடித்து, குடையை பிடித்துக் கொண்டு வர வேண்டும் என காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமுண்டேஸ்வரி தெரிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. மாமல்லபுரம் புராதன சின்னங்கள் 31-ந்தேதி வரை திறக்கப்படாது - தொல்லியல் துறை தகவல்
மாமல்லபுரம் புராதன சின்னங்கள் 31-ந்தேதி வரை திறக்கப்படாது என்று தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
2. மாமல்லபுரத்தில் முழு ஊரடங்கால் வெறிச்சோடிய மதுக்கடைகள்
மாமல்லபுரத்தில் முழு ஊரடங்கால் மதுக்கடைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
3. மாமல்லபுரம் ஐந்துரதம் பகுதியில் நடைபாதை அமைக்கும் பணிகள் தொடக்கம்
மாமல்லபுரம் ஐந்துரதம் பகுதியில் நடைபாதை உள்ளிட்ட மேம்பாட்டு பணிகளை தொல்லியல் துறை தொடங்கி உள்ளது.
4. மாமல்லபுரத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற சென்னை மது பிரியர்கள்
மாமல்லபுரத்தில் டாஸ் மாக் கடைகள் திறக்காததால் சென்னை மது பிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
5. மாமல்லபுரம் புராதன சின்னங்கள் ஆளில்லா குட்டி விமானம் மூலம் கண்காணிப்பு
மாமல்லபுரம் புராதன சின்னங்கள் சரிவர பராமரிக்கப்படுகிறதா? என்பதை தெரிந்து கொள்ள ஆளில்லா குட்டி விமானம் மூலம் கண்காணிக்கப்பட்டது.