தொழிலாளர் நல சட்டங்களை திருத்துவதை கைவிடக்கோரி அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தொழிலாளர் நல சட்டங்களை திருத்துவதை கைவிடக்கோரி தஞ்சை மாவட்டத்தில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்,
தொழிலாளர் நல சட்டங்களை திருத்துவதை கைவிடக்கோரி தஞ்சை மாவட்டத்தில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழிற்சங்கம்
தஞ்சை மாவட்டத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பாதுகாப்புடன் அனுப்பி வைக்க வேண்டும். தொழிலாளர்கள் குடும்பத்திற்கு மாதம் ரூ.7,500 நிவாரணம் வழங்க வேண்டும். தொழிலாளர் நல சட்டங்களை திருத்துவதை கைவிட வேண்டும். பொதுத்துறையை தனியாருக்கு தாரைவார்ப்பதையும், 8 மணி நேர வேலையை 12 மணி நேரம் என்று உயர்த்துவதை கைவிட வேண்டும். புதிய மின்சார திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சை தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் தில்லைவனம் (ஏ.ஐ.டி.யூ.சி.), ஜெயபால் (சி.ஐ.டி.யூ.), சேவியர் (தொ.மு.ச.), மோகன்ராஜ் (ஐ.என்.டி.யூ.சி.), ராஜன் (ஏ.ஐ.சி.சி.டி.யூ.) ஆகியோர் தலைமை தாங்கினர்.
அரசு போக்குவரத்து பணிமனைகள், நுகர்பொருள் வாணிபக்கழக அலுவலகங்கள், ஆட்டோ, கட்டுமானம், நெசவு, மீனவர், தெருவியாபாரிகள் சங்க அலுவலகங்கள், சுமைதூக்கும் தொழிற்சங்கம், அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்க அலுவலகம் என மாநகரில் 50 இடங்களிலும் மாவட்டம் முழுவதும் 207 இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருப்புகொடி ஏந்தி கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் சந்திரகுமார், மனோகரன், அன்பழகன், பாஸ்டின், ரவிச்சந்திரன், அன்பு, செங்குட்டுவன், சேவையா, கோவிந்தராஜன், துரை.மதிவாணன், முத்துகுமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மின்வாரிய அலுவலகம்
தஞ்சை மணிமண்டபம் அருகே உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில அமைப்பு செயலாளர் ஆண்ட்ரூகிறிஸ்டி தலைமை தாங்கினார். அசோக்ராஜ், சுந்தரம் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story