தஞ்சை மாவட்டத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தஞ்சை மாவட்டத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பட்டுக்கோட்டை,
தஞ்சை மாவட்டத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டை நகர சாலையோர வியாபாரிகள் சங்கம், ஏ.ஐ.டி.யூ.சி. ஆகியவை சார்பில் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சி விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி தொடங்கி வைத்து பேசினார். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகள் குடும்பத்திற்கு தலா ரூ. 15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் சுதாகர் முடித்து வைத்தார்.
பட்டுக்கோட்டையை அடுத்த ஆலத்தூர் அண்ணா சிலை அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த உறுப்பினர் பொன்னுசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி கிளைச்செயலாளர் முருகேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கிளைச் செயலாளர் வெற்றிச்செல்வம், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி கிளைச்செயலாளர் அண்ணாதுரை உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
பேராவூரணி, ஒரத்தநாடு
இதேபோல் பேராவூரணி ஆவணம் சாலையில் உள்ள கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யூ.சி. பொறுப்பாளர் முருகேசன் தலைமை தாங்கினார். செயலாளர் மூர்த்தி முன்னிலை வகித்தார். இதேபோல் ஒரத்தநாட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்டுமான தொழிலாளர் சங்க ஒரத்தநாடு கிளை செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட குழு உறுப்பினர் திருநாவுக்கரசு உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
திருவிடைமருதூர், கும்பகோணம்
திருவிடைமருதூர் தாசில்தார் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ. மாவட்ட துணை தலைவர் ஜீவபாரதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான ஆட்டோ தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
கும்பகோணத்தில் தொழிலாளர் விரோத போக்கினை கண்டித்து அனைத்து தொழிற்சங்க அமைப்புகளின் சார்பில் கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க மாநில பொருளாளர் வள்ளுவன் தலைமை தாங்கினார். கும்பகோணத்தை அடுத்த கடிச்சம்பாடியில் விவசாய தொழிலாளர் சங்க மாநில குழு உறுப்பினர் நாகராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
பாபநாசம்
பாபநாசம் ஒன்றியம் கோபுராஜபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மனோகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டம் பாபநாசம் புதிய பஸ் நிலையம், திருப்பாலத்துறை, கபிஸ்தலம், கோபாலபுரம், சக்கராப்பள்ளி, மதகடி, பசுபதிகோவில், சூலமங்கலம், பாலூர் ஆகிய இடங்களிலும் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாபநாசம் ஒன்றிய செயலாளர் காதர் உசேன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
Related Tags :
Next Story