தாராவியில் சிக்கியவர்களை தமிழக அரசு சொந்த ஊர்களுக்கு அழைத்து செல்ல வேண்டும் தமிழர்கள் கோரிக்கை


தாராவியில் சிக்கியவர்களை தமிழக அரசு சொந்த ஊர்களுக்கு அழைத்து செல்ல வேண்டும் தமிழர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 22 May 2020 11:30 PM GMT (Updated: 22 May 2020 11:12 PM GMT)

தாராவியில் சிக்கியவர்களை தமிழக அரசு சொந்த ஊர்களுக்கு அழைத்து செல்ல வேண்டும் என தமிழர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மும்பை,

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் தமிழர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். 2½ சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட இங்கு சுமார் 8½ லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். உலகிலேயே மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள ஒரு பகுதியான தாராவியில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் தனது கோர முகத்தை காட்டத்தொடங்கி உள்ளது. கடந்த ஏப்ரல் 1-ந் தேதி தான் முதலில் தாராவியில் ஒருவர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

தாராவிக்குள் வைரஸ் தாமதமாக நுழைந்தாலும் தற்போது அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதுவரை தாராவியில் 1,425 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 56 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இந்தநிலையில் தாராவியில் வாழும் தமிழர்கள் கொரோனாவில் இருந்து தப்பிக்க சொந்த ஊர் செல்ல தீவிரம் காட்டி வருகின்றனர். எனினும் ரெயில், பஸ் சேவை இல்லாததால் பலர் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். சமூகஇடைவெளி துளி கூட சாத்தியமில்லாத தாராவியில் கொரோனாவில் இருந்து எப்படி தப்பிப்பது என்பதே அவர்களின் கேள்வியாக உள்ளது.

எனவே தாராவியில் சிக்கி தவிக்கும் தமிழர்களை சொந்த ஊர் அழைத்து செல்ல தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இது குறித்து தாராவி கண்ணடிசால் பகுதியை சோ்ந்த முருகன் என்பவர் கூறியதாவது:-

தாராவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இங்கு இருந்தால் உயிர் பிழைப்போமா என்று கூட தெரியவில்லை. கொரோனா நோயாளிகளுக்கு இங்கு உரிய சிகிச்சையும் அளிக்கப்படுவதில்லை. மேலும் நோய் பரவலை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது கூட ரோட்டில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக செல்கின்றனர். பிறகு எப்படி இங்கு நோய் பரவுவது தடுக்கப்படும்.

எங்களின் நிலையை பார்த்து ஊரில் இருந்து குடும்பத்தினர் போன் செய்து பதறுகின்றனர். எனவே எப்படியாவது இங்கு இருந்து ஊருக்கு சென்றுவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தாராவி கிராஸ் ரோடு பகுதியில் வசித்து வரும் சித்ரா என்ற பெண் கூறும்போது, ‘‘எனது தந்தைக்கு சர்க்கரை நோய் உள்ளது. ஆனால் அதற்கான சிகிச்சை பெற போதிய வசதி இல்லை. தாராவி பகுதியில் பெரும்பாலான ஆஸ்பத்திரிகள் பூட்டியே கிடக்கின்றன.

சாதாரண காய்ச்சல் ஏற்பட்டால் கூட சிகிச்சை கிடைக்காமல் உயிரிழக்கும் நிலைதான் இங்கு உள்ளது. எனவே தான் பலர் இங்கு ஊருக்கு செல்ல விரும்புகின்றனர்’’ என்றார்.

தாராவி 90 அடி சாலை பகுதியை சேர்ந்த பிரேம் என்பவர் கூறுகையில், தாராவிக்குள் கொரோனா நுழையாமல் அரசு தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தற்போது புலம்புவதில் எந்த பலனும் இல்லை. பல பகுதிகளில் கிருமி நாசினி கூட முறையாக தெளிக்கப்படவில்லை. எனவே தான் நோய் தொடர்ந்து பரவுகிறது. தற்போது உள்ள சூழலில் இங்கு வசிக்கும் தமிழர்களின் உயிர்களுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. மழைக்காலம் தொடங்கினால் நிலைமை இன்னும் மோசமாகும். எனவே தான் பலர் பஸ்களுக்கு ரூ.10 ஆயிரத்துக்கு மேல் கொடுத்து ஊர்களுக்கு செல்கின்றனர். ஆனால் அதிகமான தமிழர்கள் இன்னும் ஊர் திரும்ப முடியாமல் இங்கு உள்ளனர்.

எனவே தமிழக அரசு தாராவி உள்பட மும்பையில் சிக்கி உள்ள தமிழர்களை ரெயில் அல்லது பஸ் மூலம் அழைத்து செல்ல வேண்டும். வெளிநாட்டில் இருப்பவர்களையே விமானத்தில் அழைத்து வரும் போது எங்களை அரசால் அழைத்து செல்ல முடியாதா? என கேள்வி எழுப்பினார்.


Next Story