திருவாரூர் மாவட்டத்தில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


திருவாரூர் மாவட்டத்தில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 May 2020 11:43 PM GMT (Updated: 22 May 2020 11:43 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர், 

திருவாரூர் மாவட்டத்தில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு கொரோனா பேரிடர் கால ஊரடங்கை பயன்படுத்தி பல்வேறு மக்கள் விரோத சட்டங்களை அமல்படுத்தி வருகிறது. குறிப்பாக தொழிலாளர் நல சட்டங்களை திருத்தம் செய்து 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயர்த்தியது. பொதுத்துறைகளை தனியார் மயமாக்குவது. இதனை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தது.

அதன்படி திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைத்தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். இதில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் சந்திரசேகர ஆசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர். நேதாஜி சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் மாலதி தலைமை தாங்கினார். கூட்டுறவு அங்காடி முன்பு ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் அனிபா தலைமையில் நடந்தது. இதேபோல் 7 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.7 ஆயிரத்து 500 வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., எம்.பி.எப்., ஐ.என்.டி.யூ.சி. உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கத்தினர் சமூக இடைவெளியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னார்குடி, நீடாமங்கலம்

இதேபோல் மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கத்தினர் நீடாமங்கலம் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட இணைச் செயலாளர் முனியாண்டி தலைமை தாங்கினார். சாலை போக்குவரத்து வட்ட செயலாளர் தங்கபாண்டி முன்னிலை வகித்தார். இதில் அரசு ஊழியர் சங்க வட்ட தலைவர் சின்னையன், அரசு ஊழியர் சங்க வட்ட செயலாளர் ஆறுமுகம், அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச்செயலாளர் தனபால் மற்றும் பல்வேறு தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

மன்னார்குடி நகராட்சி முன்பு ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட துணை செயலாளர் கலைச்செல்வன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டி.என்.சி.எஸ்.சி. அலுவலகம் முன்பாக மாநில சுமைதூக்கும் தொழிலாளர் சங்க பொது செயலாளர் புன்னீஸ்வரன் தலைமையிலும், உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யூ.சி நகர தலைவர் பார்த்திபன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாசில்தார் அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யூ.சி ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் மணி தலைமையிலும், தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு சின்னக்கண்ணு தலைமையிலும், அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு சந்திரசேகர் தலைமையிலும் நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டி காமராஜர் சிலை அருகில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப் பாட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன் தலைமை தாங்கினார். இதில் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கர், நகர செயலாளர் முருகேசன், தொழிற்சங்க மாவட்ட குழு உறுப்பினர் பாண்டியன், நகர தொழிற்சங்க தலைவர் வாசுதேவன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதேபோல் திருத்துறைப்பூண்டியில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பணிமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story