மாவட்ட செய்திகள்

வேலூர் அருகே தொழிலாளி சாவில் சந்தேகம் இருப்பதாக மனைவி புகார்; பிரேத பரிசோதனைக்காக உடல் தோண்டி எடுப்பு + "||" + Wife complains of worker's death near Vellore; Body digging for autopsy

வேலூர் அருகே தொழிலாளி சாவில் சந்தேகம் இருப்பதாக மனைவி புகார்; பிரேத பரிசோதனைக்காக உடல் தோண்டி எடுப்பு

வேலூர் அருகே தொழிலாளி சாவில் சந்தேகம் இருப்பதாக மனைவி புகார்; பிரேத பரிசோதனைக்காக உடல் தோண்டி எடுப்பு
வேலூர் அருகே தொழிலாளியின் சாவில் சந்தேகம் இருப்பதாக 18 நாட்களுக்கு பின்னர் மனைவி போலீசில் புகார் அளித்தார். அதைத்தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக வருவாய்துறையினர், போலீசார் முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
வேலூர்,

வேலூரை அடுத்த பாலமதி செட்டேரி மலைகிராமத்தை சேர்ந்தவர் பழனி (வயது 43), கூலி தொழிலாளி. இவர் ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் 29-ந் தேதி காலை அதே பகுதியை சேர்ந்த அவருடைய நண்பர்கள் பட்டாபி, வெற்றிவேல் ஆகியோர் பழனியை வீட்டில் இருந்து அழைத்து சென்றுள்ளனர்.

பின்னர் பிற்பகல் 3 மணியளவில் பழனி வீடு திரும்பினார். அவரின் உடலின் பல இடங்களில் காயங்கள் காணப்பட்டன. இதுகுறித்து அவருடைய மனைவி ராதா கேட்டதற்கு அவர் சரியாக பதில் கூறவில்லை. அன்று முதல் உடல்நிலை பாதிக்கப்பட்டு சோர்வுடன் காணப்பட்ட பழனி கடந்த 3-ந் தேதி திடீரென உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து குடும்பத்தினர், உறவினர்கள் உரிய சடங்குகள் செய்து அப்பகுதியில் பழனியின் உடலை புதைத்தனர்.

இந்த நிலையில் ராதா நேற்று முன்தினம் பாகாயம் போலீசில் புகார் மனு அளித்தார். அதில், எனது கணவர் வீட்டில் இருந்து வெளியே செல்லும்போது நன்றாக இருந்தார். மறுபடியும் அவர் வீடு திரும்பும்போது உடலில் காயங்கள் காணப்பட்டன. எனவே கணவரை அவருடைய நண்பர்கள் 2 பேரும் தாக்கியதில் காயங்கள் ஏற்பட்டிருக்கலாம். அல்லது வேறு ஏதாவது பிரச்சினை நடந்திருக்கலாம். அதன்காரணமாக அவரின் உடல்நிலை மோசமாகி உயிரிழந்து விட்டார் என்ற சந்தேகம் உள்ளது. எனவே இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பசலைராஜ் வழக்குப்பதிவு செய்தார்.

இந்த நிலையில் நேற்று காலை வேலூர் தாசில்தார் ரமேஷ் மற்றும் வருவாய்துறையினர், போலீசார் முன்னிலையில் பழனியின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை தோண்டும் பணி நடந்தது. இதையொட்டி அங்கு பழனியின் குடும்பத்தினர், உறவினர்கள், பொதுமக்கள் திரண்டிருந்தனர். அதனால் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு பின்னர் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. அழுகிய நிலையில் காணப்பட்ட உடல் பாகங்களை டாக்டர் குழுவினர் சிறிய டப்பாவில் சேகரித்து பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், பழனி உடல் நலக்குறைவால் உயிரிழந்தாரா? அல்லது அவருடைய நண்பர்கள் தாக்கியதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தாரா? என்பது குறித்து பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரிய வரும். இதுதொடர்பாக அவருடைய நண்பர்கள் பட்டாபி, வெற்றிவேல் ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கணவர் திடீரென உயிரிழந்தது குறித்து போலீசாருக்கு தெரிவிக்காமல் உடலை புதைத்தது குறித்தும், 18 நாட்களுக்கு பின்னர் கணவர் சாவில் சந்தேகம் என்று புகார் அளித்தது குறித்தும் அவருடைய மனைவியிடம் விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 507 தொழிலாளர்கள் ஒடிசா செல்லும் சிறப்பு ரெயிலில் பயணம்
சேலத்திலிருந்து ஒடிசா சென்ற சிறப்பு ரெயிலில் காட்பாடியிலிருந்து ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 507 தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
2. வேலூர், காட்பாடி பகுதிகளில் 27-ந்தேதி மின்நிறுத்தம்
வேலூர், காட்பாடி பகுதிகளில் 27-ந்தேதி மின்வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. வேலூர் மாவட்டத்தில் அரசு பஸ் டிரைவர் உள்பட 2 பேருக்கு கொரோனா
சென்னையில் பணிபுரிந்த வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் உள்பட 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
4. வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆட்டோ இயங்க அனுமதி வழங்கக்கோரி திரண்ட டிரைவர்கள்
வேலூர் மாவட்டத்தில் ஆட்டோ இயங்க அனுமதி வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகம் அருகே 100-க்கும் மேற்பட்ட டிரைவர்கள் திரண்டனர். தனிநபர் இடைவெளியை பின்பற்றாததால் 22 பேர் கைது செய்யப்பட்டனர்.
5. வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கின; அனைவரும் முக கவசம் அணிந்து பணியாற்றினர்
வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கின. ஊழியர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து தனிநபர் இடைவெளியுடன் பணியாற்றினார்கள்.