மாவட்ட செய்திகள்

நீலகிரி தபால் நிலையங்களில் ரூ.64½ கோடி பண பரிவர்த்தனைஅதிகாரி தகவல் + "||" + Money Transaction of Rs.64 crore in Nilgiri Post Offices

நீலகிரி தபால் நிலையங்களில் ரூ.64½ கோடி பண பரிவர்த்தனைஅதிகாரி தகவல்

நீலகிரி தபால் நிலையங்களில் ரூ.64½ கோடி பண பரிவர்த்தனைஅதிகாரி தகவல்
நீலகிரி தபால் நிலையங்களில் ரூ.64½ கோடி பண பரிவர்த்தனை செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.
ஊட்டி,

கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்திய தபால் துறை அத்தியாவசிய சேவையின் கீழ் கொண்டு வரப்பட்டு, இந்த காலக்கட்டத்திலும் தபால் ஊழியர்கள் பொதுமக்களுக்கு தேவையான சேவைகளை செய்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 181 தபால் நிலையங்களில் 749 ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். ஊரடங்கால் பஸ் போக்குவரத்து இல்லாத சூழ்நிலையில், தபால்காரர்கள் வனப்பகுதிகளை கடந்து சென்று அனைத்து சேவைகளையும் வழங்கி வருகின்றனர். இதுகுறித்து நீலகிரி கோட்ட தபால் நிலைய கண்காணிப்பாளர் கார்த்திகேயன் நிருபர்களிடம் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் 80 வயதுக்கு மேல் உள்ள 900 பேருக்கு மாதம் ரூ.1,000 முதியோர் உதவித்தொகையானது, அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டது.

மருந்துகள் அடங்கிய பார்சல்கள்

மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து மருந்துகள் அடங்கிய 389 பார்சல்கள் வந்தது. போக்குவரத்து வசதி சரிவர இல்லாத சூழலிலும், அந்த பார்சல்கள் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டன. குன்னூர், கோத்தகிரியில் இருந்து பீகார், உத்தரபிரதேசம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய வெளிமாநிலங்களுக்கு ஆயுர்வேத மருந்துகள், முகக்கவசம், கையுறைகள் அடங்கிய 500 பார்சல்கள் அனுப்பப்பட்டு உள்ளது.

நீலகிரி தபால் நிலையங்களில் 3½ லட்சம் சேமிப்பு கணக்குகள் உள்ளன. மாதாந்திர மற்றும் சீனியர் சிட்டிசன் திட்டங்களின் மூலம் வட்டி பெற்று வாழ்க்கை நடத்துபவர்கள் மிக அதிகம். பாதுகாப்பு கருதி சாதாரண கணக்குகளிலும் மக்கள் பணம் சேமித்து வைத்து உள்ளனர்.

ரூ.64½ கோடி பண பரிவர்த்தனை

கடந்த 2 மாதங்களில் 76,315 பண பரிவர்த்தனைகள் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் ரூ.64 கோடியே 69 லட்சத்துக்கு பண பரிவர்த்தனை நடந்து இருக்கிறது. தபால் நிலையங்கள் கணினிமயமாக்கப்பட்டு உள்ளதால், நீலகிரி தவிர பிற பகுதிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் தினமும் ரூ.25 ஆயிரம் பணம் எடுத்தனர். இந்த சேவைகள் கடுமையான சூழலில் மக்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருந்தது. நீலகிரி மாவட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் 863 பேருக்கு வங்கி கணக்கு இல்லை என்ற விவரங்கள் தரப்பட்டது.

புதிய கணக்கு தொடக்கம்

இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கி மூலம் 647 பேருக்கு பூஜ்ய பணத்தில் புதிய கணக்கு தொடங்கி ரூ.2 ஆயிரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. மற்றவர்களுக்கு கணக்கு தொடங்கும் பணி நடந்து வருகிறது. ஆதார் எண் மூலம் பணம் பெறும் புதிய சேவை தபால்காரர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. தபால் நிலையங்கள் அல்லாத பிற வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள், வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். மையங்களுக்கு செல்ல முடியாதபடி கிராமங்களில் இருந்தால், அந்த கணக்குகள் ஆதார் எண் மற்றும் செல்போன் எண்களோடு இணைக்கப்பட்டு இருந்தால், சம்பந்தப்பட்ட கணக்குகளில் இருந்து தபால்காரர்கள் மூலம் ஒரு நாளைக்கு ரூ.50 ஆயிரம் வரை பணம் பெறலாம். இவ்வாறு இதுவரை 1,020 பரிவர்த்தனைகள் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் ரூ.29 லட்சத்து 25 ஆயிரம் பணம் பட்டுவாடா செய்யப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.