8-வது நாளாக ஊழியர்கள் வேலைநிறுத்தம்: நீலகிரியில் பி.எஸ்.என்.எல். சேவைகள் பாதிப்பு வாடிக்கையாளர்கள் அவதி


8-வது நாளாக ஊழியர்கள் வேலைநிறுத்தம்:   நீலகிரியில் பி.எஸ்.என்.எல். சேவைகள் பாதிப்பு வாடிக்கையாளர்கள் அவதி
x
தினத்தந்தி 23 May 2020 6:00 AM IST (Updated: 23 May 2020 6:00 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரியில் 8-வது நாளாக பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பி.எஸ்.என்.எல். சேவைகள் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் வாடிக்கையாளர்கள் அவதி அடைந்து உள்ளனர்.

கூடலூர்,

பி.எஸ்.என்.எல். பொதுத்துறை நிறுவனத்தில் நிரந்தர மற்றும் ஒப்பந்த பணியாளர்கள், ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதற்கிடையில் ஒப்பந்த பணியாளர்களுக்கு கடந்த 1 ஆண்டாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் சம்பளம் வழங்கக்கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இருப்பினும் சம்பளம் வழங்கவில்லை.

இதனால் கடந்த 15-ந் தேதி மாநில அளவில் பி.எஸ்.என்.எல். நிரந்தர மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் கருப்பு பட்டை அணிந்து வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். மேலும் அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து நேற்று 8-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேவைகள் பாதிப்பு

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கூடலூர், குன்னூர் உள்ளிட்ட இடங்களில் பி.எஸ்.என்.எல். அலுவலகங்கள் பணியாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. கூடலூரில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் மூடப்பட்டது. இதனால் அலைவரிசை சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் பி.எஸ்.என்.எல். இணையதள சேவையில் இயங்கி வரும் அரசு அலுவலகங்களில் ஆன்லைன் சேவைகள் முடங்கியது.

இதேபோல் அரசு ஆஸ்பத்திரிகளிலும் ஆன்லைன் சேவையை பயன்படுத்த முடியாமல் மருத்துவ பணியாளர்கள் அவதி அடைந்தனர்.

மேலும் கூடலூர் பகுதியில் பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரங்கள் பெரும்பாலானவை செயல் இழந்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் செல்போன்களை பயன்படுத்த முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.

இது சம்பந்தமாக பி.எஸ்.என்.எல். அலுவலகங்களில் புகார் செய்ய பொதுமக்கள் வந்தாலும் மூடி கிடக்கிறது. இதனால் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து பி.எஸ்.என்.எல். ஒப்பந்த பணியாளர்கள் கூறியதாவது:-

நாங்கள் கடன் வாங்கி குடும்பத்தை நடத்தி வருகின்ற சூழலில், பலமுறை கோரிக்கை விடுத்தும் சம்பளம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பபடவில்லை. இதனால் சம்பளம் வழங்கக்கோரி 8 நாட்களாக வேலைநிறுத்தம் செய்து வருகிறோம். இது தவிர கடந்த ஏப்ரல் மாத சம்பளம் நிரந்தர ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால் அவர்களும் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். பி.எஸ்.என்.எல். அலுவலக காவலாளிகளுக்கு சம்பளம் வழங்காததால், அவர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் ஊழியர்கள் இன்றி பி.எஸ்.என்.எல். அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளது.

போராட்டம் தொடர்பாக கோவை பொதுமேலாளர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கோரிக்கையை நிறைவேற்றினால் மட்டுமே பணிக்கு திரும்ப உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story