நாங்குநேரி-களக்காட்டில் தடையை மீறிய 3 பஸ்கள் பறிமுதல்; 5 பேர் கைது


நாங்குநேரி-களக்காட்டில் தடையை மீறிய 3 பஸ்கள் பறிமுதல்; 5 பேர் கைது
x
தினத்தந்தி 23 May 2020 6:27 AM IST (Updated: 23 May 2020 6:27 AM IST)
t-max-icont-min-icon

நாங்குநேரி சுங்கச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 2 பஸ்களை நிறுத்தி சோதனையிட்டனர்.

களக்காடு, 

நாங்குநேரி சுங்கச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 2 பஸ்களை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் தமிழ்நாட்டில் இருந்து ராஜஸ்தான் மாநிலத்திற்கு 30 பயணிகளை ஏற்றி செல்வதற்கான அனுமதிச்சீட்டு இருந்தது. ஆனால், பஸ்களில் இருந்த அனைவரும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. 

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் டிரைவரிடம் இருந்த ஆவணங்களை சரிபார்த்தபோது ராஜஸ்தானில் இருந்து வரும்வழியில் எவ்வித அனுமதியும் இன்றி மராட்டியத்தில் உள்ள புலம் பெயர்ந்த தமிழர்களை ஏற்றிக் கொண்டு நெல்லைக்கு வந்தது தெரியவந்தது. இதையடுத்து பஸ்களில் இருந்த பயணிகளை வள்ளியூரில் உள்ள கொரோனா பரிசோதனை மையத்தில் சேர்த்தனர்.

பஸ் டிரைவர்கள் மதுரை திருமங்கலத்தை சேர்ந்த பிரம்மதேவன் (47), உசிலம்பட்டி இ.நடுப்பட்டியை சேர்ந்த அருண்குமார் (37) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். பஸ்களையும் பறிமுதல் செய்தனர்.

அதேபோல் 2 வேன்களில் தமிழ்நாட்டில் இருந்து வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அழைத்துச் சென்று விட்டு நெல்லை மாவட்டத்திற்கு திரும்பியதாக டிரைவர்கள் திண்டுக்கல் பாலம்பட்டியை சேர்ந்த அருள்தாஸ் (40), மதுரை திருமங்கலம் மேலக்கோட்டையை சேர்ந்த ஆசைத்தம்பி ( 37) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். 2 வேன்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

களக்காடு புதுத்தெரு கிறிஸ்தவ ஆலயம் அருகே ஊரடங்கு தடையை மீறி ஓட்டிச் சென்ற தனியார் ஆம்னி பஸ் டிரைவர் ராமேஸ்வரம் சவுந்தரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பழனிசாமி (47) என்பவரை போலீசார் கைது செய்தனர். பஸ்சும் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story