வேலை நேரத்தை அதிகரிப்பதை கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் 15 இடங்களில் ஆர்ப்பாட்டம் 46 பேர் கைது
வேலை நேரத்தை அதிகரிப்பதை கண்டித்து மாவட்டம் முழுவதும் 15 இடங்களில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திண்டுக்கல்,
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்கக் கூடாது மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு போக்குவரத்து வசதி செய்து தரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தினர் போராட்டத்தை அறிவித்தனர்.
அதன்படி திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தொ.மு.ச. பேரவை தலைவர் பசீர்அகமது தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அழகர்சாமி, சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் கே.ஆர்.கணேசன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட தலைவர் ஜெயமணி உள்பட பல்வேறு தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகள் உள்பட 16 பேரை போலீசார் கைது செய்தனர்.
15 இடங்களில் நடந்தது
அதேபோல் திண்டுக்கல்-நத்தம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு சி.ஐ.டி.யூ. நிர்வாகி ரமேஷ்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற 12 பேர் கைது செய்யப்பட்டனர். நாகல்நகரில் சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமையிலும், பேகம்பூரில் சி.ஐ.டி.யூ. நிர்வாகி ஜெயசீலன், தொ.மு.ச. நிர்வாகி ராமமூர்த்தி ஆகியோர் தலைமையிலும், ரெயில்நிலையம் அருகே டி.ஆர்.இ.யூ. நிர்வாகி காட்டுராஜா தலைமையிலும், சின்னாளப்பட்டி பஸ்நிலையம் அருகே சி.ஐ.டி.யூ. நிர்வாகி முருகன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் பழனி அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு சி.ஐ.டி.யூ. நிர்வாகி பிச்சைமுத்து, தொ.மு.ச. நிர்வாகி அய்யனார் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 18 பேரை போலீசார் கைது செய்தனர். மாவட்டம் முழுவதும் நேற்று மொத்தம் 15 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் 3 இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 46 பேர் கைது செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story