மாற்றுப்பாதை ஏற்பாடு செய்யாததால் பாலம் கட்டும் பணிக்கு மக்கள் எதிர்ப்பு
மாற்றுப்பாதை ஏற்பாடு செய்யாததால் பாலம் கட்டும் பணிக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடமலைக்குண்டு,
கடமலைக்குண்டு அருகே மயிலாடும்பாறை கிராமத்தில் ஒன்றிய அலுவலகம் முன்பாக அமைந்துள்ள தேனி பிரதான சாலையின் குறுக்கே சாக்கடை வடிகால் பாலம் அமைந்துள்ளது. இதனை இடித்து அகற்றி விட்டு அதே இடத்தில் புதிதாக பெரிய அளவிலான சாக்கடை வடிகால் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற் கான பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடந்தது.
வாகனங்கள் செல்வதற்கு மாற்றுப்பாதை ஏற்பாடு செய்யாமலும், முறையான அறிவிப்பு பலகைகள் வைக்காமலும் பணிகள் தொடங்கியதால் அந்த வழியாக வந்த வாகனங்கள் செல்வதற்கு வழியின்றி அணிவகுத்து நின்றன. அப்போது அங்கிருந்த பணியாளர்கள் வாகனங்களை பொன்னன்படுகை கிராமம் வழியாக மாற்று பாதையில் செல்லுமாறு அறிவுறுத்தினர்.
ஆனால் அந்த சாலை வழியாக சென்றால் 10 கிலோமீட்டர் கூடுதல் தொலைவு என்பதால் வாகன ஓட்டிகள் பாலம் கட்டும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் பொதுமக்களும் சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மயிலாடும்பாறை ஊராட்சி மன்ற தலைவர் அன்பில் சுந்தரபாரதம் மற்றும் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இணைய தள சேவை முடக்கம்
அப்போது வாகனங்கள் செல்ல முறையான மாற்று பாதை வசதி செய்த பின்னர் பாலம் கட்டும் பணிகளை தொடங்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் பாலம் கட்டும் பணிகளை நிறுத்தி வாகனங்களை செல்ல அனுமதித்தனர். இருப்பினும் சாலையின் ஒரு பகுதி பள்ளம் தோண்டப்பட்டு விட்டதால் மற்றொரு பகுதி வழியாக வாகனங்கள் சிரமப்பட்டு சென்றன.
இதற்கிடையே பாலத்தை இடித்து அகற்றிய போது பி.எஸ்.என்.எல். இணையதள இணைப்பு மற்றும் கோவில்பாறை கிராமத்திற்கு செல்லும் குடிநீர் குழாய் ஆகியவை துண்டிக்கப்பட்டது. இதனால், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை ஆகிய பகுதிகளில் பி.எஸ்.என்.எல். செல்போன் மற்றும் இணையதள சேவைகள் முடங்கியது.
Related Tags :
Next Story