பல்வேறு திருட்டு வழக்கில் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது 16½ பவுன் நகை பறிமுதல்
பல்வேறு திருட்டு வழக்கில் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 16½ நகை பறிமுதல் செய்யப்பட்டது.
அனுப்பர்பாளையம்,
திருப்பூரை அடுத்த கூலிபாளையம் பகுதியில் அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள ரெயில்வே பாலம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கொல்லம்பட்டியை சேர்ந்த ராமலிங்கம் என்கிற மீன்கார ராமலிங்கம் (வயது 49) என்பதும், தற்போது திருப்பூர் மாவட்டம் நாச்சிப்பாளையத்தை அடுத்த கரியம்பாளையம் பகுதியில் வசித்து வருவதும் தெரிய வந்தது.
மேலும் அவரிடம் திருப்புளி, இரும்பு ராடு உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் நகைகள் இருந்ததால் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவரிடம் இருந்து இரும்பு ராடு, திருப்புளி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் 16½ பவுன் நகை ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சிறையில் அடைப்பு
இவர் மீது அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் 5 திருட்டு வழக்குகளும், 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், தர்மபுரி மாவட்டத்தில் 8 வழக்குகள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 வழக்குகள், சேலம் மாவட்டத்தில் 2 வழக்குகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இந்த வழக்குகளில் நீதிமன்றத்தில் ராமலிங்கம் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரிந்தது. அனுப்பர்பாளையம் மற்றும் 15 வேலம்பாளையம் போலீஸ் நிலைய வழக்குகளிலும் கடந்த 3 வருடங்களாக தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரை திருப்பூர் 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story