மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 May 2020 9:55 AM IST (Updated: 23 May 2020 9:55 AM IST)
t-max-icont-min-icon

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விழுப்புரம், 

 கொரோனா வைரஸ் காரணமாக உலகமே பாதிக்கப்பட்டுள்ள இந்த பேரிடர் காலத்தில் தொடர்ந்து தொழிலாளர் விரோத சட்டங்களை இயற்றி இந்திய தொழிலாளர்களை நசுக்கும் மத்திய அரசை கண்டித்தும், அதற்கு ஆதரவாக செயல்பட்டு வரும் தமிழக அரசை கண்டித்தும் நேற்று மாநிலம் தழுவிய அளவில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக விழுப்புரம் பணிமனை எண் 1-ன் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. பொதுச்செயலாளர் பிரபா.தண்டபாணி தலைமை தாங்கினார்.

 தொ.மு.ச. தலைவர் ஞானசேகரன், சி.ஐ.டி.யு. தலைவர் மூர்த்தி, ஐ.என்.டி.யூ.சி. பொதுச்செயலாளர் முருகானந்தம், மறுமலர்ச்சி தொழிற்சங்க பொதுச்செயலாளர் மனோகரன், அறிவர் அம்பேத்கர் விடுதலை முன்னணி பொதுச்செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாக பணியாளர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் வாலிபால் மணி, தொ.மு.ச. அமைப்பு செயலாளர் வேலு, பிரசார செயலாளர் ரவிச்சந்திரன், தலைமை நிலைய செயலாளர் ராதாகிருஷ்ணன், துணை செயலாளர்கள் ராஜேந்திரன், மனோகரன், பெருமாள் மற்றும் மத்திய சங்க பணிமனை செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி கலந்துகொண்டனர். 

இதேபோல் விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை 2, 3 மற்றும் செஞ்சி, திண்டிவனம் ஆகிய பணிமனைகளிலும் போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

இதேபோல் விழுப்புரம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோன் முன்பு சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முத்துக்குமார் தலைமையிலும், விழுப்புரம் கே.கே.சாலையில் உள்ள தொழிலாளர் நல அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் செல்வம் தலைமையிலும், விழுப்புரம் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாநில செயலாளர் செல்வம் தலைமையிலும், மணம்பூண்டியில் சி.ஐ.டி.யு. தலைவர் ரகுநாதன் தலைமையிலும், திருவெண்ணெய்நல்லூர் மின்வாரிய அலுவலகம் முன்பு மின்வாரிய ஊழியர் சங்க நிர்வாகி பாக்கியராஜ் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக விழுப்புரம் நகரம், தெற்கு அலுவலகம் முன்பு நேற்று மாலை மின்வாரிய அனைத்து பணியாளர் பொறியாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி. மாநில தலைவர் அனவரதன் தலைமை தாங்கினார். மின்வாரிய அனைத்து பணியாளர் பொறியாளர் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் குமார், மண்டல செயலாளர் அறிவுக்கரசு, வட்ட பிரதிநிதிகள் ரமேஷ், பிரபாகரன், சிவராமன், விஸ்வநாதன் ஆகியோர் சமூக இடைவெளியை பின்பற்றி கலந்துகொண்டனர்.

Next Story