மதுரை பள்ளிவாசல்களில் ரம்ஜான் தொழுகைக்கு அனுமதி கோரிய வழக்கு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு


மதுரை பள்ளிவாசல்களில்  ரம்ஜான் தொழுகைக்கு அனுமதி கோரிய வழக்கு தள்ளுபடி  ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 23 May 2020 4:30 AM GMT (Updated: 23 May 2020 4:30 AM GMT)

மதுரையில் உள்ள பள்ளிவாசல்களில் ரம்ஜான் தொழுகை நடத்த அனுமதி கேட்டு மதுரை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

மதுரை, 

மதுரையைச் சேர்ந்த சாகுல் ஹமீது, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக அனைத்து வழிபாட்டு தலங்களும் பூட்டப்பட்டுள்ளன. இந்தநிலையில் முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் மாதத்தில் தற்போது நோன்பு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தினந்தோறும் நோன்பு, 5 நேர தொழுகை மற்றும் சிறப்பு தொழுகைகள் என அனைத்தையும், தற்போதைய சூழல் கருதி வீட்டிலேயே நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் வருகிற 25-ந்தேதி நோன்பு நிறைவு நாளான ரம்ஜான் பெருநாள் தொழுகையை பள்ளிவாசல் அல்லது திறந்த மைதானங்களில் ஒன்றுகூடி தொழ வேண்டும். எனவே வருகிற 25-ந்தேதி மதுரையில் உள்ள பள்ளிவாசல்களில் காலை 9 மணி முதல் 11 மணி வரை தொழுகை நடத்த அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

தள்ளுபடி

இந்த வழக்கு நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரித்த நீதிபதிகள், மத ரீதியிலான வழிபாடுகளுக்கு மத்திய-மாநில அரசுகள் தான் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இந்த விஷயத்தில் கோர்ட்டு தலையிட முடியாது. எனவே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

Next Story