விழுப்புரம் மாவட்டத்தில் சாலை பணிகள் மும்முரம்


விழுப்புரம் மாவட்டத்தில் சாலை பணிகள் மும்முரம்
x
தினத்தந்தி 23 May 2020 10:07 AM IST (Updated: 23 May 2020 10:07 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு தளர்த்தப்பட்டதை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி மும்முரமாக நடந்து வருகிறது.

விழுப்புரம், 

 தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இந்த உத்தரவினால் வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. 

காய்கறி கடைகள், மளிகை கடைகள், மருந்து கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. அதுபோல் கட்டுமான பொருட்களை விற்பனை செய்யும் கடைகளும் மூடப்பட்டன.  

மேலும் வாகன போக்குவரத்து இல்லாததால் மணல், ஜல்லிக்கற்கள், செங்கல் ஆகியவற்றை கொண்டு வர முடியவில்லை. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் அரசு கட்டிடங்கள் கட்டும் பணி மட்டுமல்லாமல் சாலையை அகலப்படுத்துவது, சீரமைப்பது, கால்வாய் அமைக்கும் பணிகள் உள்பட அனைத்து பணிகளும் முற்றிலும் முடங்கியது.  

அதுபோல் ஏற்கனவே ஒப்பந்தம் போடப்பட்டிருந்த புதிய தார் சாலை பணிகளும் தொடங்கப்படாமலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள் கண்டறியப்பட்டு அந்த பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் செய்யப்பட்டது. 

அந்த வகையில் கொரோனா பாதிப்பு இல்லாத அனைத்து பகுதிகளிலும் சாலை பணிகளை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்ட சாலை சீரமைப்பு பணிகள், சாலை விரிவாக்க பணிகள், கால்வாய் அமைக்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

 அதுபோல் ஏற்கனவே ஒப்பந்தம் போடப்பட்டு தொடங்கப்படாத சாலை பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது. அதன்படி விழுப்புரம் நகரில் போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த கே.கே.சாலையில் தார் சாலை அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இப்பணியில் சுமார் 20 தொழிலாளர்கள் முக கவசம் அணிந்தபடியும், சமூக இடைவெளியை பின்பற்றியும் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story